23 ஆண்டுகளுக்கு பிறகு ”சச்சின் – நவ்ஜோத்சிங் சித்து” சாதனையை முறியடித்த ”ரோஹித் – ராகுல்”

909

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மாவும், கே.எல். ராகுலும் 23 ஆண்டுகால சாதனையை இன்று முறியடித்துள்ளனர்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தின் டிராஃபார்டு மைதானத்தில் பரம வைரியான பாகிஸ்தானுடன் இன்று விளையாடி வருகிறது இந்திய அணி. இதில் தொடக்க வீரர்களாக ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ரோகித், 35 பந்துகளில் அரை சதம் எடுத்து பிரமாதப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி 17.3 ஓவர்களில் இந்திய அணியை 100 ரன்களை கடக்க வைத்தது. இதன் மூதல் உலகக் கோப்பையில் தொடக்க பார்ட்னர்ஷிப்பில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக புதிய சாதனையை இந்த ஜோடி படைத்தது.

முன்னதாக 1996 உலகக் கோப்பையின் போது பெங்களூருவில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் – நவ்ஜோத்சிங் சித்து ஜோடி 90 ரன்களை குவித்தது. இதுவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்சமாக இருந்தது.

23 ஆண்டுகாலமாக நீடித்து வந்த இந்த சாதனையை தற்போது ரோகித் – கே.எல்.ராகுல் ஜோடி தகர்த்தது.

ரோகித்தை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலும் 21.4 ஓவரில் அரைசதம் கடந்தார். தொடக்க விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்த இந்த ஜோடி பின்னர் பிரிந்தது. 57 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ராகுல் வஹாப் ரியாஸின் பந்துவீச்சில் பாபரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதே போல பாகிஸ்தான் அணிக்கு எதிராக உலகக் கோப்பை போட்டியில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்த 4வது ஜோடி இது ஆகும்.

அந்த வகையில் 2003 உலகக் கோப்பையில் சச்சின் – முகமது கைஃப் ஜோடியே பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் எடுத்த முதல் ஜோடி என்ற சாதனையை படைத்தது.

இதன் பின்னர் 2015ல் ஷிகர் தவான் – கோலி ஜோடியும், கோலி – சுரேஷ் – ரெய்னா ஜோடியும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் எடுத்திருந்தன.

தற்பொழுது இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு 337 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of