தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் – ஆ.ராசா ஆவேசம்..!

714

ஆர்.டி.ஐ சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக சட்ட விதிகளை சுட்டிக் காட்டி கடும் கண்டனங்களை தெரிவித்தார் தி.மு.க எம்.பி. ஆ.ராசா.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வரும் மசோதா இன்று வாக்கெடுப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய சட்ட திருத்தத்திற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

புதிய சட்ட திருத்தம், தேசிய மற்றும் மாநில தகவல் ஆணையர்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கொடுக்க வழி வகை செய்கிறது.

தேர்தல் ஆணையம் போல தேசிய தகவல் ஆணையமும் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதன் ஆணையர்களின் நியமனத்தையும், சம்பளம் நியமிப்பதையும், பதவிக்காலத்தை நியமிப்பதையும் மத்திய அரசு முடிவு செய்யும் என்பது, அதன் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் செயல். ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது தி.மு.க மக்களவை கொறடா திரு. ஆ.ராசா மிகக் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தார். அவர் பேசுகையில் ” அரசியல் சாசன சட்டம் 324-ன் கீழ் உருவாக்கப்பட்டது தேர்தல் ஆணையம்.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவான அமைப்பு என்பதால் தேர்தல் ஆணையத்தை விட தேசிய தகவல் ஆணையம் குறைந்த பலம் கொண்ட அமைப்பாக கருதுகிறது பா.ஜ.க அரசு. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் சாசனத்தின் விதி 19-ன் கீழ் வருகிறது என உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. சட்டம் 19 என்பது அடிப்படை உரிமைச் சட்டம்.

அதில் எந்த வித மாற்றங்களையும் செய்யக் கூடாது என்பதை பா.ஜ.க அரசு முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பணி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்துவது. ஆனால், அதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்து விடுகிறது.

உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தான். தகவல் அறியும் சட்டம் மக்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது. தேசிய தகவல் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்து மதிப்பிடும் மத்திய அரசின் பார்வை தவறு.

தேர்தல் ஆணையத்தைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் தகவல் ஆணையத்திற்கும் கொடுக்க வேண்டும். ஜனநாயகம் நிலைநாட்டப்பட தகவல் அறியும் உரிமைச் சட்டமே உதவும் என நான் திடமாக நம்புகிறேன்” என்றார்.

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர விரும்பும் பா.ஜ.க அரசின் நோக்கத்தை, வெளிச்சமிட்டு காட்டினார் ஆ.ராசா. “ தகவல் ஆணையர்களின் பதிவிக்காலத்தையும், சம்பளத்தையும் மத்திய அரசின் விருப்பப்படியே நியமிக்க அதிகாரம் தருகிறது இந்த சட்ட திருத்தம்.

இதனால், தேசிய தகவல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் நசுக்கப்படும். தேசிய தகவல் ஆணையம் மத்திய அரசின் ’வேலைக்காரனாக’ செயல்படப் போகிறது. அது தான் பா.ஜ.கவின் நோக்கம்.” என்று பா.ஜ.கவின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.

மேலும் தொடர்ந்த அவர் ” தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டது? இந்திய அரசு மக்களிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக; அரசு இயந்திரம் வெளிப்படைத்தன்மையோடு இயங்க வேண்டும் என்பதற்காக; முன்னேற்றத்தை நோக்கி அரசு நகரவேண்டும் என்பதற்காக;

தான் தேர்ந்தெடுத்த அரசின் செயல்பாடு பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்டது. ஆனால், இன்று பா.ஜ.க அரசு, நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி எண்ணிக்கை வைத்திருப்பதால், எதிர்ப்பை மீறி இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுமேயானால், நான் சொல்கிறேன் இது ஜனநாயகத்தின் கறுப்பு தினம்.

ஏனென்றால் ஜனநாயகம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டது.” என்று ஆவேசமாக பேசி அமர்ந்தார். சட்ட விதிகளை விளக்கி பேசிய ஆ.ராசாவின் இந்த தெளிவான பேச்சை மக்களவை உறுப்பினர்கள் ஆமோதித்து குரல் கொடுத்தனர்.

இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில், தி.மு.க சட்ட திருத்தத்திற்கு எதிராக வாக்களித்தது. மொத்தம் 79 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். இருப்பினும் 219 ஆதரவு ஓட்டுக்கள் கிடைத்ததால் இந்த சட்ட திருத்தம் மக்களவையில் நிறைவேறியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of