தந்தையை கவனிக்காத மகள்..! பறிபோன ரூ.3.80 கோடி..! கடைசியில் நடந்த செம டுவிஸ்ட்..!

890

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது கரடிக்கல். இந்த கிராமத்தை சேர்ந்த 80 வயதான வைரவன் என்பவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் 2 மகன்களும் இறந்து விட்ட நிலையில், தனது மகளான ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையுடன் வசித்து வந்தார் வைரவன்.

சில ஆண்டுகள் நன்றாக பராமரித்துவந்ததால், வைரவன் தனது பெயரில் உள்ள 3.80 கோடி ரூபாய் மதிப்பிலான 6.37 ஏக்கர் நிலத்தை தனது மகள் பெயருக்கு மாற்றி கொடுத்து விட்டார். சொத்து கை மாறியதும் வைரவனை தனது மகள் சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் வைரவன் மன வருத்தத்தில் மகளிடம் இருந்து பிரிந்து விட்டார். பின்னர் தனது இடத்தில் சிறிய வீட்டை கட்டி அங்கு வைரவன் வசித்து வந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகள் புல்டோசர் மூலம் வீட்டை இடித்து விட்டார்.

இதுகுறித்து வைரவன் திருமங்கலம் ஆர்.டி.ஓ. முருகேசனை சந்தித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து தந்தை- மகளை அழைத்து முருகேசன் விசாரணை நடத்தினார். அப்போது அவர்களுக்குள் சமரசம் ஏற்படவில்லை என தெரிகிறது.

இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை பறித்து மீண்டும் வைரவனுக்கு அந்த சொத்துக்கள் நிபந்தனைகளுடன் ஒப்படைக்கப்பட்டது.

தந்தையை கவனிக்காததால் மகளிடம் இருந்து 3.80 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிக்கப்பட்ட சம்பவம், பெற்றோரை கவனிக்காமல் விடும் குழந்தைகளுக்கு ஒரு பாடமாக இருக்கிறது.

Advertisement