ரூ.50 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி..!

1114

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்களுக்கான ஏலம் ஆங்காங்கே தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள பொதுஇடத்தில் நடைபெற்ற ஏலத்தில், நடுக்குப்பம் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் ஏலம் விடப்பட்டுள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர் பதவியை அதிமுகவின் சக்திவேல் 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியை தேமுதிகவின் முருகன் 15 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.

ஏலத்தொகையை டிசம்பர் 15ம் தேதிக்குள் செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஏலம் விடப்பட்டதாக கூறப்படும் ஊராட்சி தலைவர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பஞ்சாயத்து பதவிகளை ஏலம்விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement