எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்! குழந்தை குறித்து வெளியான நல்ல செய்தி!

831

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ஐ.வி. தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் குழந்தைக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.

ரத்த மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் அந்த குழந்தைக்கு எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதாவிடம் கேட்ட போது,

“சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட பரிசோதனையில் எய்ட்ஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது.

அந்த குழந்தையின் உடல் எடையும் தற்போது 3.2 கிலோ என்கிற அளவில் அதிகரித்து உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

எனவே சாத்தூர் பெண் அடுத்த வாரம் குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்”

என்றார்.