கடும் வெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு

812

சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் உறவினர்களுடன் வட மாநித்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த போது, பீகாரில் நிலவும் கடும் வெயிலின் காரணமாக உடல்நிலை பாதித்து நேற்று மரணம் அடைந்தார்.

சடலத்தை சேலம் எடுத்து வர முடியாமல் தவித்த உறவினர்கள், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு, சடலத்தை கொண்டு வர உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து காத்திருந்தனர்.

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் வசிக்கும் ஜவுளி வியாபாரி மல்லிகார்ஜுனன் மற்றும் அவருடைய மனைவி கலைச்செல்வி ஆகியோர் உறவினர்கள் 40 பேருடன் வட மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்றார்.

பீகார் மாநிலம் கயா விற்கு சுற்றுலா சென்றபோது மல்லிகார்ஜுனர் மனைவி கலைச்செல்வி அங்கு வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வியின் கணவர் மல்லிகார்ஜுனா மற்றும் சுற்றுலா நண்பர்கள் கலைச்செல்வியின் உடலை சேலம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர்.

கயா-விலிருந்து உடலை வாரணாசிக்கு எடுத்துச்சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சேலம் கொண்டு வர முயன்ற போது, விமான நிலைய அதிகாரிகள், கலைச்செல்வியின் இறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே விமானத்திற்குள் சடலம் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என உறுதியோடு கூறிவிட்டனர்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு இறப்பு சான்றிதழ் பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று இன்று மாலை கலைச்செல்வியின் உறவினர்கள் சுமார் 100 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் இங்கும் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாத்தால் அனைவரும் காத்திருப்பில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மற்றும் சேலம் தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடலைக் சேலம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

இதனையடுத்து உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் . சேலத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலாக்காக வட மாநிலம் சென்றவர்களில், 45 வயது பெண் கலைச்செல்வி பீகாரில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் இதுவரை வெயிலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஐ தாண்டியுள்ளது.