மோடியை எதிர்த்து களமிறங்கும் பாதுகாப்பு படை வீரர்

454

பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான். எனவே, வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி இங்கு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement