சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் வழக்கு – நடந்தது என்ன..?

670

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்…

இந்த வழக்கில் ஐகோர்ட், சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை அளித்திருந்தது. இதனை உறுதி செய்த உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக சரணடைய உத்தரவிட்டது.

இந்த நிலையில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவர் சரணடைய அவகாசம் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஜூலை 9ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனையடுத்து அன்றைய தினமே ராஜகோபால் நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதன்பிறகு அவரை சிறையில் அடைக்க சம்பத்தப்பட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

சிறைக்கு செல்லும்போதே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கைதிகளுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த 13ம் தேதியன்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

அதன்பின்பு, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறி, அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிடக்கோரி, அவரது மகன் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு கடந்த 16ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.

இதனையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள விஜயா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை 10.39 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக காலமானார்.

மேலும், இன்று இரவு 8 மணிக்கு மேல் சரவணபவன் உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Saravana-Bhavan-Rajagopal-Death-Poster