“நன்றி வருண் ராஜேந்திரன்” – “சர்காரில் சமரசம்”

365

சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் “நன்றி வருண் ராஜேந்திரன்” என்று போட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக்கொண்டார் என்று வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 30 லட்சம் இழப்பீடு கேட்டிருந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட தொகை தற்போது தரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் வழக்கு முடித்து வைக்க படுவதாக நீதிபதி எம். சுந்தர் தெரிவித்தார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ’சர்கார்’ படம் தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது. கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ. கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சர்கார் திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில் ‘செங்கோல்’ என்ற பெயரில் தான் எழுதிய கதையை திருடி, சர்கார் படத்தை தயாரித்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சம்மேளனத்தில் சர்க்கார் என்ற பெயரில் எடுக்கும் கதையை இதற்கு முன்னதாகவே செங்கோல் என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பதாகவும், சர்கார் படத்தில் கதை என்ற இடத்தில் தன்னுடைய பெயரை எழுத்தாளர் வருண் ராஜேந்திரன் என்று போட வேண்டும் எனவும் நீதிபதி எம் சுந்தர் முன்னிலையில் முறையீட்டுள்ளார், இல்லாவிட்டால் சர்க்கார் படத்திற்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளார் இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தில் சர்கார் படகதை விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் முருகதாஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த வருண் ராஜேந்திரனுக்கு சமரச மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனுதாரர் வருணும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.