ஏடிஎம் கார்ட்டில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாட்டை விதித்த எஸ்பிஐ வங்கி

856

மும்பை: இந்தியாவிலுள்ள அரசுடைமை வங்கிகளில் முதன்மையாக திகழும் எஸ்பிஐ வங்கி, கடந்த சில மாதங்களாக புதிய விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்து
வாடிக்கையாளர்களை வாட்டி வதைத்து வருகிறது.

நகரங்களில் வசிக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் கணக்கில் குறைந்தது ரூ.3000 இருக்க வேண்டும் என்றும், எஸ்பிஐ ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் எடுத்தால் அபராதம் என்றும், மற்ற வங்கிகள் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் எடுத்தாலும் அபராதம் என பல்வேறு விதிமுறைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்கிறது.

இந்நிலையில் புதிதாக ஒரு விதிமுறையை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கிகளின் மேஸ்ட்ரோ மற்றும் கிளாசிக் வகை டெபிட்
கார்டுகளை பயன்படுத்துபவர்கள் இனிமேல் நாள் ஒன்றுக்கு ரூ.20000 மட்டுமே பணம் எடுக்க முடியும். முன்னதாக ரூ.40000-த்தை டெபிட் கார்டு பயன்படுத்துவோர்
எடுக்கலாம் என்ற முறை அமலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய கட்டுப்பாடு வரும் 31-ந் தேதி முதல் அமலுக்கு வரவிருப்பதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி
பணபரிவர்த்தனையை தடுக்கவும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் எஸ்பிஐ வங்கி நிறுவனம் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டெபிட் கார்டு வழியாக தினமும் அதிக பணம் எடுக்க விரும்புவர்கள் எஸ்பிஐ-யின் உயர்வரம்பு கொண்ட டெபிட் கார்டுகளுக்கு மாறலாம் என வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement