பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடையில்லை

669

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கவும், விற்பனை செய்யவும், பத்திரப்படுத்துவதற்கும் தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி, அசோக்பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் பட்டாசுகள் வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டனர். பட்டாசுகளை விற்பனை செய்யவும், வெடிக்கவும் சில கட்டுப்பாடுகளையும் நீதிபதிகள் விதித்துள்ளனர்.

பட்டாசுகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு தடை விதித்துள்ள நீதிபதிகள், சுற்றுசூழலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்கக்கூடாது என்றும், அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதிக சப்தம் எழுப்பும் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தயாரிக்க கூடாது என்றும், விதிகளை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கண்டிப்புடன் தெரிவித்தனர்.

மேலும், பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட அளவிலான சப்தம் உடைய பட்டாசுகளையே விற்பனை செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசுகள் வெடிக்கலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement