கொரோனா தாக்கம்  –  4 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடல்

392

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கேரளா, டெல்லி, மணிப்பூரை தொடர்ந்து மேலும் 4 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்தொடர்ச்சியாக, டெல்லி, கேரளா, மணிப்பூர் மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.

டெல்லியில் பொது நீச்சல் குளங்கள், ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளங்கள் ஆகியவை வரும் 31-ந்தேதி வரை மூடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அனைத்து வகுப்புகளையும் 31-ந்தேதிவரை ரத்துசெய்வதாக அறிவித்து உள்ளது.

இருப்பினும், வழக்கமான அலுவல் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், பஞ்சாப் ஆகிய மேலும் 4 மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை மூட அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

உத்தரபிரதேசத்தில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் ஆகியவை 22-ந்தேதிவரை மூட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.  மத்தியபிரதேசத்தில், தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் மறுஉத்தரவு வரும்வரை மூடப்படுவதாக அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இருப்பினும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பொதுத் தேர்வுகள், 5 மற்றும் 8-ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற உள்ளன. பீகாரில், அனைத்து பள்ளி, கல்லூரிகள், மிருகக்காட்சி சாலைகள் ஆகியவற்றை 31-ந்தேதிவரை மூட அந்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதேபோல் பஞ்சாப் மாநிலத்திலும் 31-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது, மகாராஷ்டிரா மாநிலத்தில், திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை வரும் 30 ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of