உலகின் முதல் செயற்கை சிங்கக்குட்டிகள்: தென்னாப்பிரிக்க விஞ்ஞானிகள் சாதனை

1415

மாறி வரும் தட்பவெப்ப சூழ்நிலையாலும், மனித இனங்கள் செய்யும் தவறுதலினாலும் விலங்குகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக சிங்க இனங்களின் அழிவு என்பது பெரிதும் கவனிக்கத்தக்க வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் 43 சதவீதம் குறைந்து போயுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை, 26 ஆப்பிரிக்க நாடுகளில் முற்றிலும் அழிந்து போயுள்ளது. இந்நிலையில் சிங்கங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விலங்கியல் அறிவியலாளர்கள் புதுமையான முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி பல்கலை விஞ்ஞானிகள், தென்னாப்பிரிக்கா நாட்டிலுள்ள பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் விலங்கியல் பாதுகாப்பு மையத்தில் பெண் சிங்கம் ஒன்றை செயற்கை முறையில் கருத்தரிக்க செய்தனர். ஒரு ஆண் சிங்கத்தின் உயிரணுவை பெண் சிங்கத்தின் கருமுட்டையில் செலுத்தி விஞ்ஞானிகள் இந்த செயற்கை கருத்தரிப்பு முறையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி பெண் சிங்கத்திற்கு இரண்டு சிங்கக்குட்டிகள் பிறந்தன. விக்டர், இஷாபெல் என பெயரிட்டப்பட்ட அந்த இரண்டு சிங்கக்குட்டிகள் கடந்த 5 வாரங்களாக நலமுடன் வாழ்ந்து வருகின்றன என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

தற்போது இந்த இரண்டு சிங்கக்குட்டிகளும் விலங்கியல் பாதுகாப்பு மையத்தில் ஓடியாடி விளையாடுகின்றன. இவற்றை பொதுமக்கள் கண்டுகளிக்கின்றனர்.
உலகிலேயே முதல் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த சிங்கக்குட்டிகள் என்ற சிறப்பை விக்டர் மற்றும் இஷாபெல் பெற்றுள்ளன.

Advertisement