வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா? – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்

413

நாகையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக பயிர்களை அழித்து கெயில் நிறுவனம் குழாய் பதிப்பதை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காவிரி தண்ணீர் இல்லாத சூழலிலும், பருவமழை தவறிய நிலையிலும், கிணற்றுநீர் பாசனத்தின் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் டெல்டா பகுதி விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர்.

இந்த சூழலில் நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா மாதானம் முதல் தரங்கம்பாடி வரை நெற்பயிர் நடவுசெய்யப்பட்ட வயல்கள் வழியாக, சுமார் 29 கி.மீ. தூரத்துக்கு, ஹைட்ரோ கார்பன் கொண்டு செல்வதற்கான குழாய்களை பதிக்கும் வேலைகளில், காவல்துறை அடக்குமுறை மூலம் கெயில் நிறுவனம் தீவிரமாக களமிறங்கியுள்ளது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை காத்திருந்து, தேர்தல் முடிந்தவுடன் மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை சர்வாதிகாரப் போக்கில் செயல்படுத்த தொடங்கியுள்ளன. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஓஎன்ஜிசியின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக ராட்சத குழாய்களை பதிக்கும் கெயில் நிறுவனம், நெற்பயிர் நடவுசெய்யப்பட்ட வயல்களில் போலீசார் உதவியுடன் அடக்குமுறையை கையாண்டு, கனரக இயந்திரங்கள் மூலம் பயிர்களை நாசம் செய்து குழாய்களை பதித்து வருகின்றன.

பொதுமக்களுக்கு, விவசாயிகளுக்கு எந்த விளக்கமும் தெரிவிக்காமல் இந்த பணியை கெயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாய் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல, தமிழகத்தின் கொங்கு மண்டலத்தை சேர்ந்த 7 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக குழாய்களை கெயில் நிறுவனம் பதித்துவரும் நிலையில், தற்போது டெல்டா மாவட்டத்தையும் சிதைத்து வருவதை தமிழக அரசு வேடிக்கை பார்த்துவருவது கண்டனத்திற்குரியது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காக ஒட்டுமொத்த தமிழக விவசாய பகுதிகளை ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் நாசம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த நாசகார திட்டத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் விவசாயிகளுடன் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

வளர்ச்சி என்ற பெயரால் அத்தியாவசிய விவசாயத்தை அழிக்கும் புதிய திட்டங்களை ஏற்றுக்கொள்ள இயலாது. விவசாயத்தை அழிப்பது என்பது கண்களை விற்று சித்திரம் வரைவதற்கு ஒப்பாகும்.

ஆகவே, விவசாய நிலங்களை பாழாக்கி கெயில் நிறுவனம் மேற்கொண்டுவரும் அடாவடி செயலை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

விவசாயிகளின் நெடுநாள் கோரிக்கையான காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிரம்காட்டும் பட்சத்தில், ஏற்கனவே எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்தது போன்று மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of