“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை

2124

பொங்கல் சிறப்பு கவிதை:

கருமணலில் நடவு செய்து

கரை கட்டி நீர் பாய்த்து

கற்கண்டு வடியும்

கரும்பு சோகை வீசிடவே!

அவள் உருட்டி வைத்த

களி மண்ணில்

கூன் விழுந்த

கூட்டை நகர்த்தி

கூவி கூவி

விற்ற பானை

குளவி குளவி கத்திடவே!

நீர் தேக்கி

உழுத மண்ணில்

வேர் பிடித்து

விளைந்து நிற்க,

கதிரவன்

கண் திறக்கும்

வேளையிலே

கதிர் அறுத்து

பொங்கிடவே!

நானிலம் உழுத

கால் வெடிப்பை

சேற்றில் புதைத்த

உயர்வினை போற்றி!

நன்னிலை உயர

அவன் வடித்த

வியர்வை துடைத்து

கலை கட்டிய மண்ணில்

காளைகளை கட்டவிழ்த்திடவே!

நீராடி விளையாடும்

போராளிகள்,

காளைகளிடம்

போராடி பெற்ற

இன்முகத்தை

தேரோடும் தெருவோடும்

கொண்டாடி தீர்க்கும்

‘தை’ப்பொங்கலே!

பொங்கிடுவீர்!.

நெல் மணிகளை

உதிர்த்த மண்ணில்

உதிரம் உதிராமல்

உழைத்திட பொங்கிடுவீர்!.

 

நெற்கதிரை அறுக்கும் கதிரில்

நிற்கதியாய் தொங்கும்

கயிற்றை அறுக்காமல்

எரித்துப் பொங்கிடுவீர்!.

விவசாயம் செழிக்க

பொங்கிடுவீர்!.

விவசாயி முகிழ்த்திட

பொங்கிடுவீர்!.

 

குளவிப்பாட்டில்

விவசாயிகளின்

ஓல ராகத்தை ஒழித்து

புதுப்புனலாடி பொங்கிடுவீர்!.

 

நாட்டின் முதுகெலும்பு

நிமிர்ந்திட பொங்கிடுவீர்!

கூனிடும் முதுகெலும்புகளை

நிமிர்த்திட பொங்கிடுவீர்!.

சாதிகளை சாணமாக்கி

சமத்துவப் பொங்கலை

பொங்கிடுவீர்!.

 

– சாக்லா

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of