“நான் நேரில் அழகாக இருக்கிறேன் என பெண்கள் பார்க்கவந்துள்ளீர்கள்..” – ஸ்டாலின் பேச்சை விளாசிய சீமான்..!

895

வேலூர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து, சத்துவாச்சாரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அவர் பேசுகையில், ‘‘இங்கு நடப்பது அடிமைகளின் ஆட்சி. பாரதிய ஜனதா தலைமை சொல்வதை அ.தி.மு.க அரசு கைக்கட்டிக் கேட்கிறது.

‘ஒருவன் காலில் விழுந்துதான் வாழ வேண்டும் என்ற நிலை இருக்குமானால், நான் எழுந்துநின்று இறந்துபோவேன்’ என்று கற்பிக்கிறார், புரட்சியாளர் சே குவேரா. மண்டியிட்டு வாழ்வதா மானத் தமிழரின் வாழ்க்கை. இந்தப் பதவியை வைத்து என்னதான் செய்யப்போகிறீர்கள். பதவிக்காகக் கட்சி மாறிச் செல்பவர்கள் மக்களுக்கு எப்படி உதவி செய்வார்கள்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அன்றே சொன்னார், ‘பாலை விற்பதைப் போல தண்ணீரை ஒருநாள் விற்பார்கள்’என்று. அது, இன்றைக்கு நடக்கிறது. நான் ஒன்று சொல்கிறேன், ‘காற்றை ஒரு நாள் விற்பார்கள். சுங்கச்சாவடி அமைத்து காற்றுக்கு வரி வசூலிக்கும் நிலை வரும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உலகம் சந்தையாகிவிட்டது.”

‘ஸ்டாலின் பேசுகிறார், ‘பெண்களெல்லாம் சீரியல் பார்ப்பதைவிட்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். தொலைக்காட்சியில் பார்ப்பதைவிட நான் நேரில் அழகாக இருக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்’. இப்படியா, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார்… தலையெழுத்து!’

மனிதன் விற்பனை பண்டம்தான். காய்ச்சல் என்று மருத்துவமனைக்குச் சென்றால், மூளைச்சாவு என்றுசொல்லி உடல் உறுப்புகளைத் திருடி பெரிய கோடீஸ்வரர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பேருந்துக் கட்டணத்தை ஏற்றிவிட்டு, ஸ்கூட்டிக்கு மானியம் கொடுத்த அரசாங்கத்தை எங்கேயாவது பார்த்ததுண்டா?

தேர்தலில் தலைவர்கள் பேசுவதைக் கேட்கும்போது, பாஸ்போர்ட்டை கொடுத்தால் வேறு நாடுகளுக்கு ஓடிப்போய்விடலாம் என்று தோன்றுகிறது. என்னையும் அவர்கள் விடுவதாக இல்லை. நானும் அவர்களை விடுவதாக இல்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் என்னுடைய ஆட்டம்தான் இருக்கும்.

ஒரு பிச்சைக்காரர் சிக்னலில் பிச்சையெடுக்கிறார். காரில் இருந்த ஒரு பெண், பணமில்லை என்றுகூறி கார்டை காட்டுகிறார். உடனே அந்த பிச்சைக்காரர், ஸ்வைப் மெஷின் மூலம் கார்டை தேய்த்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறார். இதற்குப் பேர் தான் ‘டிஜிட்டல் இந்தியா’. தேர்தலில் நான் தோற்கவில்லை. மக்கள் தான் ஒவ்வொரு முறையும் தோற்கிறார்கள்’’ என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of