”மதுவிலக்கை உடனே அமல்படுத்து” – கோவை சம்பவத்தால் ஆவேசமடைந்த சீமான்

1451

உடனடியாக மதுவிலக்கினை அமல்படுத்திடக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

கோவை ஜம்பு கண்டி பகுதியில் இருக்கும் மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபரால் , மருத்துவரும், இயற்கை ஆர்வலருமான கோவை ரமேஷ் அவர்களின் மனைவி ஷோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது ஒரே மகளும் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, மனைவியின் சடலத்துடன் ஜம்பு கண்டி பகுதியில் உள்ள மதுபானக்கடையை மூடக்கோரி சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தனது மனைவி பலியாவதற்கு காரணமான விபத்து நடந்த இடத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டார் மருத்துவர் ரமேஷ்.

இச்சம்வம் அப்பகுதியில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இனி ஒரு குடும்பமும் கூட மதுவால் பாதிக்கப்படக் கூடாது. மதுவிலக்கினை உடனடியாக அமல்படுத்திட வேண்டுமென தெரிவித்து  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், “தெருவெங்கும் மதுபானக்கடைகளைத் திறந்துவைத்து குடிகாரர்களால் மக்கள் உயிருக்கு உலை வைத்திருப்பது என்பது தமிழக அரசாங்கம் நேரடியாக மக்கள் நலவாழ்வின் மீது இழைத்திருக்கின்ற பெரியதோர் கொடுமை.

மதுபானக் கடையில் குடித்துவிட்டு வந்த நபரால் தன் மனைவியின் உயிரை இழந்த மருத்துவர் ரமேஷ் சடலத்தோடு வீதியில் இறங்கி மதுபானக்கடையை மூடப்போராடியது என்பது மிகுந்த வலியைத் தருகிறது.

காயம்பட்டத் தனது மகளைகூடப் பார்க்கச் செல்லாமல் தனியொரு ஆளாய் நின்று போராடி அம்மதுபானக்கடையை மூடுவதாக அரசினை அறிவிக்க வைத்திருக்கிறார்.

மதுவிலக்கு என்பதைத் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்து அதிகாரத்திற்கு வந்த அதிமுக அதனைச் செயற்படுத்தத் துரும்பையும் கிள்ளிப் போடாதிருப்பது மிகப்பெரும் மோசடித்தனம்; வாக்குசெலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்கிற பச்சைத்துரோகம்.

இதுநாள்வரை மதுபானக்கடைகளை மூடாது மதுவிலக்கைச் செயற்படுத்த மறுத்து வரும் தமிழக அரசின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆகவே, இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமலிருக்க இனிமேலாவது மதுவிலக்கினைச் செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும் எனவும்,

மதுவிலக்கை அமல்படுத்தும்வரை உடனடி தற்காலிக நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மக்கள் வசிப்பிடங்களில் இருந்து மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத ஆபத்தில்லாத இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Chanmugam mano Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Chanmugam mano
Guest
Chanmugam mano

மேடையிலேர்ந்து இறங்க ஆவேசமும் இறங்கிடும் அவருக்கு.
வாய்க்குமுன்னாடி மைக் இல்லேன்னா வாயே திறக்காது அவருக்கு..
ஆவேசமாம ஆவேசம்..