“இதுக்கெல்லாம் பயப்படாதீங்க விஜய் தம்பி” – ஆதரவு கரம் நீட்டிய சீமான்..!

306

‘பிகில்’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் பேசியதால் வன்மத்துடன் அவருக்கு நெருக்கடி அளிக்கிறார்கள்.

அரசுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததால் விஜய்யை தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது. அவர் தைரியமாக இருக்கவேண்டும் என சீமான் கூறியுள்ளார்.

நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னரே வெளியாக உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேனர் விவகாரத்தில் தமிழக அரசை விஜய் விமர்சித்தது அமைச்சர்களைக் கோபமூட்டியது.

அதன்பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி என கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ” ‘பிகில்’ உட்பட எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை. கூடுதல் கட்டணமும் வசூலிக்கக்கூடாது. அதை மீறி சிறப்புக் காட்சிகளைத் திரையிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறியிருந்தார்.

நேற்று மீண்டும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவரது ட்விட்டர் பக்கத்தில்,’சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. மேலும் முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால் தீபாவளி ரிலீஸ் படங்களுக்கான சிறப்புக் காட்சி இல்லை என்பது உறுதியானது. விஜய்யின் ‘பிகில்’ பட விவகாரமே அரசின் இந்தக் கோபத்துக்குக் காரணம். இதனால் மற்ற படங்களும் பாதிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இது தொடரும் எனத் திரையுலகினர் கவலையுடன் பார்க்கின்றனர்.

ஆனால் சமூக ஆர்வலர்கள், ”சிறப்புக் காட்சிகள் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கில் ஒரு டிக்கெட் என விற்று லாபம் பார்ப்பது குறித்து ஏராளமான புகார்கள் அரசுக்கு அளித்துள்ளோம். இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது” என்கின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சீமான் விஜய்க்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளார். அவரது பேட்டியில், ‘நடிகர் விஜய் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக்கொண்டுதான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துகளைப் பலரும் தெரிவித்து விட்டார்கள்.

தம்பி விஜய் இசை வெளியீட்டு விழாவில் பேசினார் அல்லவா? அந்த வன்மத்தை வைத்து ஒரு தலைமுறை பார்க்கும் ஒவ்வொரு முறையும் நெருக்கடி கொடுப்பது சரியல்ல. திரையரங்குகள் தராமல் நெருக்கடி தருவது சரியல்ல.

ஏற்கெனவே ‘கத்தி’, ‘சர்கார்’ போன்ற படங்கள் வெளிவந்தபோது இதே நெருக்கடிகள் வந்தன. அப்போதும் நான் ஆதரவு தெரிவித்தேன். அவருக்கு மட்டுமல்ல தம்பி சூர்யாவின் படத்துக்கும் ஆதரவு தெரிவித்திருக்கிறேன். இதற்கெல்லாம் தம்பி விஜய் அஞ்சக்கூடாது’ என சீமான் கூறியுள்ளார்.