வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் – காங்கிரஸ்

750

வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு, மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராவோம் என்று எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த போராட்டத்தில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய மன்மோகன் சிங், மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்துவரும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, தற்போது எல்லை மீறி செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை என்று தெரிவித்த அவர், மாறாக மக்கள் மீது சுமையை ஏற்றி வருவதாக கூறினார். அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஓரணியில் திரண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராக வேண்டும் என மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார்.

இதனிடையே பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிப்பெற்றதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இனியாவது மத்திய அரசு விலையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

Advertisement