சாஸ்த்ரா பல்கலைகழகம் – காலி செய்யாவிட்டால் கட்டிடங்கள் இடிக்கப்படும்

643
sastra

தஞ்சையில் திறந்தவெளி சிறைசாலை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சாஸ்த்ரா பல்கலைகழகம் கட்டியுள்ள, 28 கட்டிடங்களை நாளை மறுநாளுக்குள் இடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைகழகம்  தமிழக அரசின் சிறைத்துறைக்கு சொந்தமான 58.17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளதாக புகார் எழுந்தது.

அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி செய்ததை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக் கழகத்துக்கே வழங்கலாம் என தீர்ப்பளித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்துக்கு ஈடாக 10 கோடியைப் பெற்றுக்கொண்டு அந்த நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்கலாம் என்று ஒரு நீதிபதியும், ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மற்றொரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கினர்.

இதனையடுத்து இந்த வழக்கில் 3 வது நீதிபதியும் ஆக்கிரமிப்பு அரசு நிலத்தை உடனடியாக மீட்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் சிறைத்துறைக்கு சொந்தமான 58.17 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் 28 கட்டிடங்களை, காலி செய்யாவிட்டால், நாளை மறுநாள் அந்த கட்டிடங்கள் காவல்துறை உதவியோடு இடிக்கப்படும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.