எங்களை தன்னிச்சையாக நீக்கியது யார்? – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..!

393

தேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படிதான் செயல்படுகிறதா, எங்களை கூட்டணியில் இருந்து தன்னிச்சையாக யார் நீக்கியது, அதிகாரம் யார் கொடுத்தது என்று பாஜகவை நோக்கி சரமாரிக் கேள்விகளை சிவசேனா எழுப்பியுள்ளது.

மகாராஷ்டிராவில் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜகவும், சிவசேனாவும் முதல்வர் பதவிக்கான போட்டியால் ரு கட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் சிவசேனா இருக்கிறது.

இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்துக்கும் சிவசேனா சார்பில் எந்தப் பிரதிநிதியும் செல்லவில்லை. இதனால், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் சிவசேனாவுக்கு என்டிஏ எம்.பி.க்கள் அமரும் இடத்திலிருந்து இருக்கை ஒதுக்காமல் எதிர்க்கட்சிகள் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.


இதனால் சிவசேனா கடும் ஆத்திரமடைந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிவேசேனா கட்சி விலகிவிட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சியுடன் சேர்ந்தபோதே விலகிவிட்டது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

இதைக் கண்டித்து சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்தும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பிக் கட்டுரை எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

”தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் (சிவசேனா) இல்லை என்று அறிவித்த நபருக்கு வரலாற்றைப் பற்றி என்ன தெரியும்? என்டிஏ கூட்டணியை யார் உருவாக்கியது தெரியுமா? சிவசேனாவின் கர்மா-தர்மாவில் இருந்துதான் என்டிஏ உருவானது.

அரசியல் ஜாம்பவான்களான சிவசேனா நிறுவனர் மறைந்த பால்தாக்கரே, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், மறைந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மூத்த தலைவர் எல்.கேஅத்வானி, அகாலி தளம் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர்தான் என்டிஏ கூட்டணியை உருவாக்கிய தூண்கள்.

என்டிஏ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸும், தலைவராக அத்வானியும் இருந்தனர். எந்த முக்கியமான முடிவும் எடுக்கும் முன், கூட்டம் போட்டு விரிவாக ஆலோசித்து ஒற்றுமையாக முடிவு எடுப்போம்.

ஆனால் இன்று, என்டிஏ அமைப்பின் தலைவர் யார், ஒருங்கிணைப்பாளர் யார் எனத் தெரியுமா? என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கூட்டம் நடந்ததா?. ஆலோசிக்கப்பட்டதா?, எந்த அடிப்படையில் சிவசேனா கட்சியை தன்னிச்சையாகக் கூட்டணியில் இருந்து நீக்கினீர்கள்?, யார் நீக்கியது?

என்டிஏ அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான பால் தாக்கரேவின் 7-வது ஆண்டு நினைவு நாளில், நாடே பால் தாக்கரேவுக்கு தலைவணங்கி இருக்கும்போது தன்னிச்சையாக எங்களை நீக்கி அறிவித்துள்ளார்கள். கடந்த ஏழரை ஆண்டுகளாக என்டிஏ கூட்டணியின் நம்பகத்தன்மை அழிந்து, சிவசேனா வெளியேற்றப்பட்டதால், படிப்படியாக கூட்டணி அழிந்து வருகிறது.

தன்னிச்சையான, அகங்கார அரசியலின் முடிவின் தொடக்கம் இது. சத்ரபதி சிவாஜியின் மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு குழப்பம் விளைவித்தவர்களை வேருடன் அகற்றாமல் நாங்கள் ஓயமாட்டோம்.

எவ்வளவு பணம் அல்லது அதிகார பலமும் இருந்தாலும் சிவாஜியின் மண்ணில் வேலை செய்யாது. கடந்த அக்டோபர் மாத சட்டப்பேரவைத் தேர்தலில் இதைப் பார்த்திருப்பீர்கள். எங்களை என்டிஏவில் இருந்து நீக்கும் முன் அல்லது கூட்டத்துக்கு எங்களை அழைத்து சம்மன் அனுப்பப்பட்டதா. எங்கள் மீது குற்றம் சாட்டும் பாஜக, ஜம்மு காஷ்மீரில் பிடிபி கட்சியுடன் கூட்டணி அமைக்க என்டிஏ கூட்டத்தைக் கூட்டி அனுமதி பெற்றதா?

பிரதமர் மோடியை எப்போதும் விமர்சித்து வரும் நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைக்கும் முன் என்டிஏ கூட்டத்தைக் கூட்டி அனுமதி பெறப்பட்டதா? என்டிஐ அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான பால் தாக்கரேவின் நினைவு நாளில் சிவசேனா கூட்டணியில் இருந்து நீக்குவதில் எந்த நேரத்தையும் நீங்கள் இழக்கவில்லை.

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் சிவசேனா வாழ்க என்ற கோஷம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கும் கவுண்ட் டவுன் தொடங்கிவிட்டது. நாங்கள் தயாராகிவிட்டோம்”.

இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of