“இனி டிரெஸ் வாங்கமாட்டேன்” – வியக்கவைக்கும் காரணம் சொல்லும் “நேர்கொண்ட பார்வை” நடிகை

383

2019-ம் ஆண்டு, நடிகை ஷ்ரதா ஶ்ரீநாத்துக்கு மிக முக்கியமான வருடம் என்றே சொல்லலாம். அந்தளவுக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளிலும் தன் தடத்தைப் பதித்துவிட்டார் ஷ்ரதா.

இந்த வருடம் மட்டும், ஏறத்தாழ ஒன்பது படங்கள் ஷ்ரதா கணக்கில் உள்ளன.`ஜெர்ஸி’, ‘நேர்கொண்ட பார்வை’ உட்பட ஆறு படங்கள் ரிலீஸாகிவிட்டன; இன்னும் மூன்று படங்கள் தயாரிப்பு அளவில் உள்ளன.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும், இரண்டு விஷயங்களில் கவனமாக இருந்துவிடுகிறார் இவர். ஒன்று, உணவும் உடற்பயிற்சியும். முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 18 கிலோ வரை குறைத்துள்ளாராம். இதை தனது இன்ஸ்டா பக்கத்தில், பெருமையாகப் பதிவுசெய்துள்ளார்.

மற்றொரு விஷயம், அவருடைய சுற்றுச்சூழல் ஆர்வம். பருவநிலை மாற்றங்கள் தொடர்பான தீர்வுகள், தனிநபர்களிடமிருந்து தொடங்க வேண்டும் என்பது ஷ்ரதாவின் எண்ணம். அந்த வகையில், தனது சொந்த வாழ்க்கையில் அதற்காகப் பல முன்னெடுப்புகளைச் செய்துள்ளார். அவற்றில் முக்கியமானது, `நோ ஷாப்பிங்’ ரெசல்யூஷன்! விழாக்காலத்தில் ஷ்ரதா எடுத்துள்ள இந்த முடிவு, பலருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

`ஏங்க இப்படியொரு முடிவு?’ என்றால், `ஜவுளி மற்றும் சாயத் தொழில் கழிவுகளால் பூமிக்கு ஏற்படும் கேட்டை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி அது. எனவே, நான் எனது ஷாப்பிங் ஹேபிட்டுக்கு குறுகிய காலத் தடை போட்டிருக்கிறேன்.

டிசம்பர் வரைக்கும் எந்தக் காரணம் கொண்டும் ஷாப்பிங் பண்ணக் கூடாதுனு, எனக்கு நானே சபதமெடுத்திருக்கேன்’ என்கிறார் ஷ்ரதா.

சமீபத்தில் கொண்டாடிய தன் பிறந்தநாளுக்குக் கூட புதுத்துணி வாங்கவில்லையாம். `அடுத்தடுத்து பண்டிகைகள் வருதே, அதுக்கும் ஷாப்பிங் பண்ண மாட்டீங்களா?’ என்றால், `கொண்டாட்டங்கள் ஆடையில் இல்லையே!’ என்கிறார் சீரியஸாக!