“ஜம்மு – காஷ்மீருக்கு செல்லலாம்” – சீதாராம் யெச்சூரிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த சுப்ரீம் கோர்ட்

254

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு செல்வதற்கு சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இன்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள், அனைத்தும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும், யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதை எதிர்த்தும், உச்சநீதிமன்றத்தில் 12 வழக்குகள் தொடரப்பட்டன. தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு இந்த வழக்குகளை இன்று விசாரித்தது.

அப்போது, முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், சீத்தாராம் யெச்சூரி காஷ்மீர் செல்வதற்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. காஷ்மீரில் உள்ள சிபிஎம் கட்சியின் நிர்வாகி முகமது யூசுப்பை சந்திப்பதை யெச்சூரி அரசியலாக்கக்கூடாது என்றும் நண்பராக சந்திக்கலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் ஆசிரியர் தொடர்ந்த வழக்கில், ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு ஒருவாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இணையதளகட்டுப்பாடு, தொலைத்தொடர்புத்துறை சேவை ரத்து, ஊரடங்கு உத்தரவு ஆகியவை குறித்து, மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முகமது அலீம் சையது தொடர்ந்த மற்றொரு வழக்கில்,காஷ்மீரில் உள்ள பெற்றோரை சந்திப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஜம்மு – காஷ்மீர் பகுதி மக்களுடன் நாட்டு மக்கள் தொடர்புகொள்வது அவசியமானது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும், 5 – நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of