ஊரடங்கு உத்தரவு – அதிகரித்த ஸ்மார்ட்போன் பயன்பாடு

486

ஊரடங்கு உத்தவு காரணமாக தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் முடங்கியுள்ள மக்களின் பொழுது போக்கிற்காக அதிகளவில் தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்கின்றனர்.

ஊரடங்கு உத்தரவில்  பொதுமக்களின் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்த நீல்சன் நிறுவனம், தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் மார்ச் 28-ம்தேதி அன்று தொடங்கிய வாரத்தில், தொலைக்காட்சி பார்ப்பது 43 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் இது 44 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28 ஆம் தேதி அன்று தொடங்கிய வாரத்தில் திரைப்படம் பார்ப்பது அதிகரித்துள்ளது.  திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 77 சதவீதமும், தமிழகத்தில் 89 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் செய்திகளை பார்ப்பது அதிகமாக இருந்துள்ளது.

பிரைம் டைம் அல்லாத நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பது 43 சதவீதமும், பிரைம் டைம்மில் 11  சதவீதமும் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவபர்களின் விகிதம் மார்ச் 21 அன்று தொடங்கிய வாரத்தில் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் சராசரி அளவு,  தினமும் 3.24 மணி நேரத்தில் இருந்து 3.48  மணி நேரமாக அதிகரித்துள்ளது.

Advertisement