காஷ்மீரில் தடையை மீறி நுழைந்த சமூக ஆர்வலர்கள்..! – கள நிலவரம் என்ன?

399

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 -ஐ அரசியலமைப்பிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. சில இடங்களில் அது நிலைமையைப் பொறுத்து தளத்தப்பட்டும் வருகிறது.

மேலும் அங்கு தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டு, முழுவதும் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படுள்ள நிலையில் அங்குள்ள நிலைமையைத் தெரிந்துகொள்ள சமூகச் செயற்பாட்டாளர்கள் நான்கு பேர் தடையைமீறி 5 நாள்கள் பயணமாக காஷ்மீர் சென்று வந்துள்ளனர்.

அவர்கள் கடந்த புதன்கிழமை டெல்லி ப்ரஸ் க்ளப் ஆஃப் இந்தியாவில் (PCI) செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அதில் அவர்கள் அங்கு நிலவிரும் சூழ்நிலையையும் அவர்கள் கண்ட நிகழ்வுகளையும் விளக்கினர்.

டெல்லிச் செய்தியாளர்கள் சந்திப்பில் சமூகச் செயற்பாட்டாளர்கள்
இந்தப் பயணம் மேற்கொண்ட நான்கு பேர்: அனைத்திந்திய முற்போக்கு மாதர் சங்கத்தின் (AIPWA) செயலாளர் கவிதா கிருஷ்ணன், பெல்ஜியத்தைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜீன் ட்ரஸே (Jean Dreze), அனைத்திந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தைச் (AIDWA) சேர்ந்த மைமூனா மொல்லா, மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பைச்(NAPM) சேர்ந்த விமல் பாய். இதில் கவிதா கிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, “நாங்கள் அங்கே கடந்த ஆகஸ்ட் 9’ம் தேதி முதல் ஆகஸ்ட் 13’ம் தேதி வரை ஆய்வு மேற்கொண்டோம். ஸ்ரீநகர் நகரம் காலியாகவும் அமைதியாகவும் காணப்பட்டது. மேலும், அங்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டிருந்தன.

அங்கு அனைத்து விதமான கடைகளும், பள்ளிகளும், கல்லூரிகளும், அரசு அலுவலகங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்தன. சில ஏ.டி.ம்-களும் மருந்துக்கடைகளும் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. அனைத்துக் காவல் நிலையங்களும் திருந்திருக்கின்றன.

டெல்லிச் செய்தியாளர்கள் சந்திப்பில் சமூகச் செயற்பாட்டாளர்கள்
நாங்கள் ஶ்ரீநகர், பாரமுல்லா, பந்திப்பூர், ஆனந்த்நாஹ், புல்வாமா, சோபியான் ஆகிய மாவட்டங்களில் உள்ள சௌரா, டவுன்டவுன் ஶ்ரீநகர், சோபூர், பாம்பூர் போன்ற நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் சிறு கிராமங்கள் வரை சென்றோம்.

அங்கு நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சாமானியர்களைச் சந்தித்துப் பேசினோம். அங்கு எவரும் அரசின் இந்த முடிவுக்கு ஆதரவாக இல்லை. அதே சமயம், அரசின் நடவடிக்கைக்கு பயந்து கேமராவின்முன் எதுவும் சொல்ல முன்வரவில்லை.

அங்கு நாங்கள் மக்களிடம் பேசியபோது அவர்கள் கூறியதாவது, ‘கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு இருந்தது. உடல்நலக்குறைவு உடையவர்கள் மருத்துவமனைக்குக்கூட அனுமதிக்க இயலவில்லை.

அரசு, காஷ்மீர் மக்களை அடிமைப்போல் நடத்துகிறது. எங்களை சிறைப்பிடித்துவிட்டு எங்கள் வாழ்க்கை மற்றும் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவுகளையும் எடுத்துக்கொண்டிருக்கிறது. இது தலையில் துப்பாக்கிவைத்துக்கொண்டு கட்டாயப்படுத்துவது போன்றதாகும்’.

டெல்லிச் செய்தியாளர்கள் சந்திப்பில் சமூகச் செயற்பாட்டாளர்கள்
காஷ்மீர் தொலைக்காட்சிகள் அனைத்தும் மூடப்பட்டு செயல்பட முடியாத நிலையில் உள்ளது. காஷ்மீர் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக திருமண ரத்து அறிவிப்புகள் மட்டுமே இருந்தன. இதுகுறித்து உயர் காவல் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, அவரே இவற்றை சர்வாதிகாரம் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த கவிதா கிருஷ்ணன், “எங்களை ராணுவத்தினருக்கும் காவலர்களுக்கும் யார் என்று தெரியாதது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. காஷ்மீரிலுள்ள எங்கள் தோழர்கள் உதவியுடன்தான் அங்கு தங்கினோம். மேலும், ஆட்டோ மற்றும் டாக்ஸி டிரைவர்களின் உதவியுடன்தான் வெவ்வேறு இடங்களுக்குப் பயணிக்க முடிந்தது.

காஷ்மீர் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். ஆனால் இதை இந்திய ஊடகங்கள் மறைக்கின்றனர். இது போன்று, இந்தியை எதிர்ப்பதனால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து ‘ஹிந்திஸ்தான்’ என்று பெயர் வைத்தால், தமிழக மக்கள் எப்படி அமைதியாகப் போராடுவார்களோ அப்படித்தான் காஷ்மீர் மக்களும் அமைதியாகப் போராட விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான சுதந்திரம் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை”

இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் சொந்த ஊருக்குச் சென்று அங்கு நிகழ்வதை அறிய முடியாமல் தவிக்கும் டெல்லியில் படிக்கும் காஷ்மீர் மாணவர்களும் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of