இனி 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட்

304

சர்வதேச தூதரகங்கள் மூலம் வெறும் 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் துவக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நடைபெற்ற பாஸ்போர்ட் சேவை திட்ட துவக்க விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் கூறுகையில், ”வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு 48 மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் டிஜிட்டல் மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பாஸ்போர்ட் வழங்கும் பணி மிகத் துரிதமாக நடக்கும் எனவும் வரும் காலங்களில், உலகளவில் பாஸ்போர்ட் சேவையில் இந்தியா சிறந்து விழங்கும் என்றார். மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்காக விதிகளும், நெறிமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் ரீதியில் சரிபார்க்கப்படுகின்றதாக தெரிவித்தார்.

முன்னதாக, இந்த திட்டம் கடந்த 21ம் தேதி, நியூயார்க்கில் துவக்கி வைக்கப்பட்டது. பின்னர் வாஷிங்டனிலும், அதனை தொடர்ந்து அட்லாண்டா, சிகாகோ, சான்பிரான்சிஸ்கோ நகரங்களில் உள்ள இந்திய தூதரக அலுவலகங்களில் துவக்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.