சுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,

2703

ஆரம்பத்தில் எஸ்.பி.பி தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் மட்டுமே பாடல்களை பாடி வந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான், எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் படத்தில் பாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது…

எம்.ஜி.ஆர் படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்காக, ஸ்டுடியோ ஒன்றில் எஸ்.பி.பி பாடிக்கொண்டு இருந்தார். அப்போது, எஸ்.பி.பியின் குரலைக் கேட்ட எம்.ஜி.ஆர், தனது அடுத்த படத்தில் எஸ்.பி.பி பாட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

இதையடுத்து, எஸ்.பி.பி பற்றி இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனிடம் எம்.ஜி.ஆர் கூறியிருக்கிறார். பிறகு எஸ்.பி.பி வீட்டிற்கு சென்ற கே.வி. மகாதேவன், சின்னவர் ( எம்.ஜி.ஆர்) தனது படத்தில் நீங்கள் பாட வேண்டும் என விரும்புகிறார் என்று கூறியிருக்கிறார்.

உடனே, மகிழ்ச்சியடைந்த எஸ்.பி.பி, எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் பிறகு சுசீலாவுடன் இணைந்து ஆயிரம் நிலவே வா பாடலை பாடிப் பயிற்சி எடுத்தார். பாடலை ஒலிப்பதிவு செய்வதற்குள் எஸ்.பி.பி-க்கு டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்பட்டதால், பாடலை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்ய முடியவில்லை.

ஒரு வாரத்தில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதால், எஸ்.பி.பி மிகவும் வருந்தியுள்ளார். எம்.ஜி.ஆர் படத்தில் பாட இருந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன் என்று நினைத்திருக்கிறார். மீண்டும் உடல் நலம் தேறிய பிறகு, எஸ்.பி.பிக்கு அழைப்பு வந்துள்ளது.

அதில், மீண்டும் பாடல் பாட வாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள். இதனைக்கேட்டு ஆச்சரியமடைந்த எஸ்.பி.பி, அந்த பாடலை பாடிக்கொடுத்தார். பிறகு அவர் பாடியதைக் கேட்டு எம்.ஜி.ஆரும் பாராட்டியுள்ளார். ஆர்வம் தாங்காமல் இந்தப் பாடலைத் தன்னையே பாட வைத்தது ஏன் எனக் கேட்டுள்ளார் எஸ்.பி.பி.

இதற்கு பதில் அளித்த எம்.ஜி.ஆர், என்னுடைய படத்துக்குப் பாடுகிறேன் என நண்பர்களிடம் சொல்லியிருப்பீர்கள்.

இப்போது உங்களுக்குப் பதிலாக வேறொரு பாடகரைப் பாட வைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? எனக்கு உங்களின் குரல் பிடிக்கவில்லை என்பதால் தான் பாடகரை மாற்றிவிட்டேன் என வெளியே செய்தி வரும். இந்தத் துறையில் நீங்கள் முன்னேறுவதற்கு அது தடையாக அமையும்.

எனவே தான் நீங்கள் தேறி வரும் வரை படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் எம்.ஜி.ஆர். இதைக் கேட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு எம்.ஜி.ஆரிடம் ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் எஸ்.பி.பி.