பிரபல பாடகர் SPB-யின் மனைவிக்கு கொரோனா..!

1029

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், வதந்திகளை நம்பவேண்டாம் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த வாரம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். விரைவில் அவர் பூரண நலம் பெற்று திரும்பி வருவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளதாக கூறியுள்ளார்.

தனது தந்தையின் உடல்நலம் மீது அக்கறை கொண்டு, நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தையின் உடல் நிலை குறித்து, சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மனைவிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி சாவித்திரிக்கு நேற்றிரவு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் மற்றும் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரிடம் விசாரித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவாக குணமடைய வாழ்த்துவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement