நான் EVM பேசுகிறேன்! சிறப்பு தொகுப்பு!

694

ஒற்றை விரல் எதை மாற்றும் என்ற கேள்விக்கு, நாட்டையே மாற்றும் என்று பதில் அளித்தவன் நான். ஆம் நான் தான் EVM (Electronic Voting Machine) பேசுகிறேன்!

1982 ஆம் ஆண்டு சின்னஞ்சிறு குழந்தையாக இந்தியாவில் நான் தோன்றினேன். ஆனால் அன்று வெறும் 50 வாக்கு சாவடிகளில் மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன். பின்னர் 1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் என்னை மீண்டும் பயன்படுத்தினார்கள்.

என் வருகையின் காரணமாக அன்று மரங்கள் கொண்டாட்டமாக இருந்தன. ஆம் 8,800 டன் காகிதங்களின் பயன்பாடு என்னால் குறைக்கப்பட்டதாம். நான் பல நாடுகள் சுற்றியுள்ளேன். ஆனால் என்னால் மறக்க முடியாத நாடு என்றால், அது இந்தியா தான்.

இங்கு தான் என்னை தொடுவதற்கு விலை பேசுகின்றனர், சிலர் பலமுறை தொடுகின்றனர். சிலர் தொடவே வராமல், வியாக்கியானம் பேசுகின்றனர். என்னை 5 வருடத்திற்கு ஒருமுறை தொடுவதும், அவர்களின் விரலில் மையை இடுவதும் ஜனநாயக கடமை என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

இவர்களாவது பராவாயில்லை, அரசியல் கட்சியினர் பலர், அவர்களுக்கு ஓட்டு வரவில்லையெனில் என் மீது சந்தேகம் கொள்கின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, வளர்ச்சியை கொடுத்திருந்தால், உங்கள் பொத்தான் வறட்சியில் இருந்திருக்காது என்பதை அறிந்திருக்கவில்ல.

என்னை சந்தேகம் கொண்ட எந்தவொரு அரசியல்வாதியும், நான் தவறு செய்தேன் என்பதை இன்று வரை நிரூபிக்கவில்லை என்று மிகவும் கர்வத்துடன் தெரிவித்துக்கொள்வேன். ஒவ்வொரு முறையும் எதிர்பார்ப்பேன், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனையும் காண வேண்டும் என்று.

ஆனால் எந்த முறையும் அது நடந்ததில்லை. இந்த முறையாவது என் ஆசையை தீர்த்து வையுங்கள் என் அன்பு நண்பர்களே. இந்த முறையும் நான் வந்துள்ளேன். என்னை கீழே போட்டு உடைக்காதீர்கள், எனக்கு அவப்பெயர் சூட்டி அழைக்காதீர்கள். உங்களின் மெல்லிய விரல்களால் மெதுவாக அழுத்துங்கள்.

நான் உங்களின் தலையெழுத்தை மாற்றப் போகின்றவன், உதாசினப்படுத்தாமல், வாக்கை போடுங்கள். நாட்டை மாற்றுங்கள்.

இப்படிக்கு
உங்களின் EVM

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of