சுஜித் சம்பவம்..! யார் செய்த தவறு..? சாட்டையடி தொகுப்பு..!

2539

அது தவறு, இது தவறு, அவன் தப்பு பண்றான், இவன் தப்பு பண்றான் என நாள் பொழுதும் குறை கூறிவிட்டு நாமும் அதையே செய்வோம். யார் செய்வது தவறு, யார் மாறவேண்டும் என்ற கேள்விகளுக்கு சாட்டையடியாக அமைந்துள்ளது இந்த தொகுப்பு..

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்துக்கு பிரார்த்தனை செய்துகொண்டே, நிரம்பி வழியும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தான் 3 குழந்தைகளை பெற்ற தகப்பன். சுஜித்துக்கு பரிதாபப்பட்டுக்கொண்டே 16 பள்ளி குழந்தைகளை தன் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்கிறான் ஓட்டுநர்…

போர்வெல்லை மூடாதவர்களை திட்டிக்கொண்டே செல்போன் பேசிய படி பைக்கை ஓட்டிச் சென்றான் வாகன ஓட்டி… லஞ்சம் வாங்கிக்கொண்டு தரமற்ற பள்ளி பேருந்துக்கு சான்றிதழ் கொடுத்துவிட்டு, ஓட்டை வழியே குழந்தை விழுந்தவுடன் தானே நடவடிக்கை எடுக்க கிளம்பிவிட்டான் ஒரு அதிகாரி.

சீனாவைப் பார், சிங்கப்பூரைப் பார் என்று புலம்பிக்கொண்டே ரோட்டோர டிரான்ஸ்பார்மரின் கீழ் அவசரத்துக்கு ஒதுங்கினான் ஒரு சாமானியன். மனிதாபிமானம் என்பதே இப்போது இல்லை என்று பேசிக்கொண்டே, விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவனை வீடியோ எடுத்து வைரலாக்கினார் ஒரு நல்லவன்…..

மக்கள் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப் போடும்வரை இப்படித்தான் இருக்கும் என்று திட்டிவிட்டு, 50,000 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து பணியிட மாற்றம் வாங்குகிறான் ஒருவன். நாட்டின் பொருளாதாரம் சரிந்து போனதால் மனம் உடைந்து, தினமும் 500 ரூபாய் டாஸ்மாக்-க்கு தண்ட செலவு செய்கிறான் ஒரு குடிமகன்.

நீர் வாங்கவும், பீர் வாங்கவும் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டே, தொழிற்சாலைகளால் தான் காற்று மாசு ஏற்படுகிறது என்கிறான் ஒருவன். நிர்பயாவிற்கு பிறகு 40,000 நிர்பயாவை பார்த்தாச்சி. அடுத்தவர் முதுகை பார்த்து சிரிக்கும் எவனும் தன் முதுகை சுத்தமாக வைத்து கொள்வதில்லை….

முன்னெச்சரிக்கை (என்ற வார்த்தை) இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது சில சம்பவங்களை பார்க்கும் போது? இதுவும் கடந்து போகும். இதைவிட பெரிய பொழுதுபோக்கு வந்தால் அதை விமர்சனம் செய்ய தயாராகிவிடுவோம்..

தனிமனித ஒழுக்கம் போற்றப்படும் வரை நமக்கும் பொழுதுபோக்குக்கும் பஞ்சம் இருக்காது. மக்கள் மாறினால் மொத்தமும் மாறும்… முதலில் நாம் மாறுவோம்… தானாக சமூகமும் மாறும்…