இலங்கை தாக்குதல்: இஸ்லாமியர்களை பலிகடாவாக்க நடந்த சர்வதேச சதி..! – ஐநா மீது குற்றம்சாட்டும் தேவாரயர்..!

2144

இலங்கையில் ஈஸ்டர் நாளில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்கள் ஒரு சர்வதேச சதி என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம் சீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் பேசியதாவது: சர்வதேச சதிகாரர்களால் இஸ்லாமிய இளைஞர்கள் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் அழிவுகளை ஏற்படுத்த இஸ்லாமிய சித்தாந்தங்களை ஒரு கருவியாக்கி வருகின்றனர்.

இதனை முஸ்லிம்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும். அபுபக்கரை பாதுகாக்கும் நாடு உலகின் மிக சக்திவாய்ந்த நாட்டின் ராணுவ முகாமில்தான் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி இருப்பதாக அறிக்கை ஒன்றை பார்த்தேன்.

அந்த நாட்டின் நலன்களுக்காகவே ஐ.எஸ். இயக்கம் உருவாக்கப்பட்டது என கூறி இத்தகைய தாக்குதல்களை மற்ற நாடுகளில்அரங்கேற்றுவது ஏன்?

இத்தகைய தாக்குதல்களை அரங்கேற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உலக அரங்கிலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதற்கான முயற்சிகள் நடக்கிறது.

சிங்களர்-முஸ்லிம் மோதலுக்கு சதி ஈஸ்டர் தாக்குதல்களை அந்த சக்திவாய்ந்த நாடு முன்னரே அறிந்திருக்குமோ என சந்தேகப்படுகிறோம்.

இலங்கையில் சிங்கள- முஸ்லிம் இனங்களிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கத்தில்தான் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். 

ஈஸ்டர் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய சித்தாந்தத்தால் உந்தப்பட்ட இளைஞர்களே காரணம் என நாங்கள் ஒருபோதும்  நம்பமுடியாது.

ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதால்தான் சர்வதேச அளவில் மோதல்கள் நிகழ்கின்றன. 

ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கிடைக்காது. ஏனெனில் ஒரு ஐந்துநாடுகள் தான் அந்த அமைப்பையே கட்டுப்படுத்துகிறது. அவர்களுக்காக மட்டுமே ஐநா சபை செயல்படுகிறது.

குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டோரை ஐநா அதிகாரிகள் யாரும் சந்திக்கவே இல்லை. ஆனால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை சந்தித்தனர். 

ஈஸ்டர் பேரழிவை தடுத்திருக்க முடியும். ஆனால் தடுக்காமல் விட்டுவிட்டனர். முஸ்லிம்களுக்கு எதிராக யாரும் கோபப்பட வேண்டாம். அவர்கள் மீது குற்றம் சுமத்தி எந்த பயனுமே இல்லை. இவ்வாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் பேசினார்.

ஐஎஸ் என்ற அமைப்பை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி இஸ்லாமியர்களின் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் இயக்கி வருகின்றனர் என சமூக ஆர்வலர்களும் அரசியல் தலைவர்களும் கூறி வந்த நிலையில் தேவாரயரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.