யார் முன்னிலை..? – ஸ்ரீலங்கா தேர்தல் முடிவுகளில் குழப்பம்.. – மாறுபட்ட தகவல்களை தரும் அரசு தளங்கள்..!

1349

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பொது ஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை வகித்து வந்தார்.

ஆனால், தமிழர் பகுதிகளில் தேசிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச பெற்ற அபார வாக்கு முன்னிலை அவருக்கு ஒட்டுமொத்த முன்னிலையை பெற்றுத் தரத் தொடங்கியது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதிகாரபூர்வ பக்கத்தில் சஜித் பிரேமதாஸ முன்னிலை வகிப்பதாகவும், அதிகாரபூர்வ செய்திப் பக்கத்தில் கோட்டாபய முன்னிலை வகிப்பதாகவும் முரண்பட்ட செய்திகள் வெளியாகின்றன.

தமிழர் பகுதியில் சஜித் அபார முன்னிலை – தெற்கில் கோட்டாபய முன்னிலை

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிற பல தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்று வந்தாலும், தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவைவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

கோட்டாபயவுக்கு ஆதரவாக தமிழர் கட்சிகள் சில மேற்கொண்ட நிலைப்பாடு, அவருக்கு ஆதரவாக தமிழர் வாக்குகளைப் பெற்றுத் தருவதற்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சஜித் பிரேமதாச கோட்டாபய ராஜபக்ஷவைவிட 2.40 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

யாழ்ப்பாணம் மாவட்டம்:

சஜித் பிரேமதாச – 3,12,722

கோட்டாபய – 23,261

வன்னி – முல்லைத் தீவு (உள்நாட்டுப் போரில் இறுதி யுத்தம் நடந்த பகுதி):

சஜித் பிரேமதாச – 47,594 (86.19%)

கோட்டாபய – 4,252 (7.70%)

தேர்தல் முறையும் – வாக்கு எண்ணிக்கையும்

இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இரண்டு நிர்வாக மாவட்டங்கள் என்றபோதும் இவை இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக உள்ளன. அதுபோல முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகியவை மூன்று தனித்தனி நிர்வாக மாவட்டங்களாக உள்ளபோதும் இவை மூன்றும் ஒரே தேர்தல் மாவட்டமாக உள்ளன.

வாக்காளர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இப்படி இவை பகுக்கப்பட்டன. எனவேதான் நிர்வாக மாவட்டங்களை விட தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்று குறைவாக இருக்கின்றன.

வாக்குகள் தொகுதிவாரியாக எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறவரே ஜனாதிபதியாவார்.

இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு, மூன்றாவது தேர்வு என்று ஒருவர் மூன்று பேருக்கு வாக்களிக்க முடியும். முதல் தேர்வு மட்டுமே முதலில் எண்ணி முடிக்கப்படும். அதில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வு பெற்றவர்கள் யார் என்பது எண்ணப்படும்.

தபால் வாக்குகள் மட்டும் மாவட்ட வாரியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த அடிப்படையில்தான் முதலாவதாக காலி மாவட்ட தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

Advertisement