காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் வெளியிட்ட ஸ்டாலின்

452
stalin

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்துவிட்டு, பேட்டி என்ற பெயரில் அளித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு ஊழல் புகாரை வெளியிடும் போது ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு தான் அறிக்கை விடுவேன் என்பது கூடத்தெரியாமல், அமைச்சர் காற்றாலை ஊழலை மறைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள நெல்லை மண்டல ஆடிட் பிராஞ்சின் உதவி ஆடிட் அதிகாரி தனது அறிக்கையில், உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது என்பதை ஆதாரமாக ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

ஊழல் நடக்கவில்லை என்று இப்போதும் அமைச்சர் கூறுவாறேயானால், அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஊழல் குறித்து, சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடத் தயாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.