பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா..?  -ஸ்டாலின்

205

நகராட்சி நிர்வாக ஆணையரகத் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ உள்ளிட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பணிகளைக் கவனித்து வரும் தலைமைப் பொறியாளர் நடராஜன் திடீரென்று மாற்றப்பட்டு, சட்ட விதிகளுக்கு மாறாக, சென்னை மாநகராட்சியில் அதிகாரமில்லாத பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

நடராஜனுக்குப் பதில் சென்னை மாநகராட்சியிலிருந்து புகழேந்தி என்ற முதன்மை தலைமைப் பொறியாளரை, நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் நியமித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

நகராட்சி நிர்வாக ஆணையகரத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சிப் பொறியாளரை நியமிக்கக் கூடாது என்று தெளிவான சட்ட விதிகள் உள்ள நிலையில்,  விதியை மீறி – புகழேந்தியைக் கொண்டு வந்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் டெண்டர் பணிகளை கவனிக்கும் பொறுப்பில் இருந்த நடராஜனை சென்னை மாநகராட்சிக்கு மாற்றி, அங்கு தர நிர்ணய தலைமைப் பொறியாளர் பதவியில் அதிகாரம் இல்லாமல் அமர்த்தியிருப்பதன் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

“எந்த விசாரணைக்கும் தயார்” என்று அடிக்கடி பேட்டியளித்து வரும் முதலமைச்சர் பழனிசாமி, இந்த 17 ஆயிரம் கோடி ரூபாய்த் திட்டங்கள் குறித்தும், நடராஜனின் மாறுதல், புகழேந்தியின் தொடர் பணி நீட்டிப்பு, நியமனங்கள் ஆகியவை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of