’’வரும் ஆனா வராது” – மோடியை கலாய்த்த ஸ்டாலின்

519

மோடி அறிவிக்கும் திட்டங்கள் வரும் ஆனா, வராது என்ற நிலையில் தான் இருக்கிறது என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தென்சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எல்லோரும் கற்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வியை கருணாநிதி கொண்டுவந்தார். அந்த திட்டம் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருந்தவர் இந்த வேட்பாளரின் சகோதரர் தங்கம் தென்னரசு.

இதே தென்சென்னை தொகுதியில் தான் பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தி.மு.க.வின் கோட்டையாக தென்சென்னை விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.

சென்னை மக்களுக்காக மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டுவந்தோம். மோனோ ரெயில் திட்டம் தான் வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் இன்றைக்கு நிலை என்ன? பிரதமரை அழைத்து விழா நடத்துகிறீர்களே? இது யார் கொண்டுவந்த திட்டம்? நந்தம்பாக்கத்தில் இந்திய வர்த்தக மையம், கண்ணாடி தொழிற்சாலை உள்பட 100-க்கும் அதிகமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. டைடல் பார்க்கை உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி தான். ஐ.டி. துறை வளர்ச்சிக்கு தி.மு.க. தான் காரணம்.

மோடியாக இருந்தாலும் சரி, எடப்பாடியாக இருந்தாலும் சரி இவர்கள் இந்த சாதனைகளை சொல்ல முடியுமா? வேதனை தான் மிஞ்சும். வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றாரே மோடி? வேலை கிடைத்து இருக்கிறதா?. வேலைவாய்ப்பை உருவாக்கும் விஷயத்தில் மோடி அரசு தோல்வியை தழுவியிருக்கிறது.

ராணுவத்தையும் மோடி விட்டுவைக்கவில்லை. ராணுவ வீரர்களின் தியாகத்தை தன்னுடைய தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார். விஞ்ஞானிகளையும் விட்டுவைக்கவில்லை. தான் மட்டுமே அரசு என்று செயல்படுகிறார். இது சர்வாதிகாரம். தினமும் ஓராயிரம் பொய்களை சொல்லுகிறார். அரசியலுக்காக வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை மோடி தவறாக பயன்படுத்துகிறார்.

பொள்ளாச்சி அவமானம் ஒன்று போதாதா? 7 ஆண்டுகளாக அங்கே கொடுமை நடக்கிறது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார். இதுபற்றி கேட்டால், பிரியாணி கடையில் தி.மு.க.வினர் ரகளை செய்தார்கள் என்று திசைதிருப்புகிறார்கள்.

சரி, அந்த விஷயத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்தோமா இல்லையா? ஆனால் நீங்கள் யார் மீது நடவடிக்கை எடுத்தீர்கள்? முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். இல்லையென்றால் உங்கள் ஆட்சி போன பிறகு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

கோடநாடு பற்றி மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என்று கோர்ட்டுக்கு சென்றார்கள். நடந்தது உண்மையா? இல்லையா? என்று கோர்ட்டு கேட்டு இருக்கிறது. நாங்கள் பேசுவோம், இது பனங்காட்டு நரி.

எதற்கும் அஞ்சாது. கோடநாட்டில் நடந்தது என்ன? ஜெயலலிதா இறந்தார் என்ற செய்தி கிடைத்ததும், தங்களுக்கு எதிரான ஆதாரங்களை எடுக்க கூலிப்படையை அனுப்பிவைத்தார்கள்.

கொலைகள், தற்கொலை எல்லாம் திடீரென்று நடந்தது. இதற்கு யார் காரணம்? இதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் கூறினேன். இதற்கு தடை கேட்டு தான் கோர்ட்டுக்கு போனார்கள்.

ஆட்சிக்கு விரைவில் வருவோம் அப்போது ஜெயலலிதா மரணத்திற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜெயலலிதா இறந்த காரணத்தினால் தான் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

இந்த 2 ஆட்சிகளையும் அப்புறப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு தரவேண்டும்.

விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணையாக செலுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் இதுவரையில் கிடைத்து இருக்கிறதா? இது மட்டுமல்ல அவரின் திட்டங்கள் அனைத்தும் ‘வரும், ஆனா வராது’ என்ற நிலையில் தான் இருக்கிறது.

ஆனால் ராகுல்காந்தி அறிவித்த ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் நிதியுதவி கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of