பேப்பர் பென்சில் கூட இல்லை.. பரிதாபத்தில் மாநில மனித உரிமை ஆணையம்..

1364

1997-ம் ஆண்டு தமிழகத்தில், மாநில மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டது.
தற்போது அதன் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி மீனா குமாரியும், உறுப்பினர்களாக ஜெயச்சந்திரன் மற்றும் சித்தரஞ்சன் மோஹன்தாஸும் உள்ளனர்.அத்திப்பூத்தாற்போல மனித உரிமைக்கு எதிரான விவகாரங்களை கையிலெடுக்கும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னை மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டிருக்கிறது.

முகலிவாக்கத்தில் பள்ளிச்சிறுவன் தீனா மூடப்படாத குழிக்குள் இருந்த மின்சார கம்பியை மிதித்து உயிரிழந்தது தொடர்பாக வழக்கத்திற்கு மாறாக  கொஞ்சம் கடுமையாகவே நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

ஆனால் மனித உரிமை ஆணையத்தின் நிலைமையே நிவாரணம் கேட்கும் நிலையில் இருப்பதாக கூறுகிறார்கள் அலுவலக பணியாளர்கள்.

மனித உரிமை ஆணையம் கையிலெடுக்கும் வழக்குகளை விசாரிக்கும் உறுப்பினர்களுக்கு,உதவி செய்வதற்கு இரண்டு நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வழக்கு பதிவு செய்வது, குறிப்புகள் எடுப்பது, திருத்தம் செய்வது,நோட்டீஸ் அனுப்புவது என அனைத்து பணிகளையும் இருக்கும் ஊழியர்களை வைத்தே செய்வதால் சில நேரங்களில் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என்கிறது அலுவலக வட்டாரம்.

இதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம் “உட்கார ஒரு நல்ல சேர் கூட  இல்லை”  ஏன்  பேப்பர்,பேனா கூட  இல்லை சார்! என அலுத்துக்கொள்கிறார்கள் ஊழியர்கள்.

மற்ற அரசு அலுவலகம் போல நினைக்காதீர்கள் நாங்கள் படு மோசமான நிலைமையில் பணியாற்றிவருகிறோம் என்கிறார்கள் தமிழ்நாடு மனித உரிமை ஆணைய அலுவலக பணியாளர்கள்.

இவ்வளவு மோசமான சூழ்நிலையிலா மனித உரிமை ஆணையம் இருக்கிறதென அறிவதற்காக மனித உரிமை ஆர்வலர் பூமொழியிடம் பேசினோம்.

மனித உரிமைக்கு எதிரான எவ்வளவோ சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. அதை எல்லாம் மனித உரிமை ஆணையம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

வெறும் கண்துடைப்பிற்காக இருக்கும் அமைப்புக்கு எதற்கு செலவு செய்ய வேண்டுமென அரசு நினைத்திருக்கலாம். சும்மா இருக்கும் டேபிளுக்கு எதுக்கு சார்!
பேப்பர் பேனா என்கிறார்.

தங்களோடு  உரிமைகளை பெறவே போராட்டம் நடத்த வேண்டிய பரிதாபத்தில் இருக்கிறது.. மாநில மனித உரிமை ஆணையம்.. அய்யோ பாவம்.

Advertisement