சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மறுத்த சிபிஐ

534
Statue-smuggling

சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணை எதிர்த்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் ,ஆதிகேசவலு அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்து கடிதம் அனுப்பியுள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சிலை கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை அனுப்பிவைக்கும் படியும், அதன் அடிப்படையில் இந்த வழக்குகளை சிபிஐ விசாரிக்க முடியுமா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, சிலை கடத்தல் தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், சிபிஐ-யில் ஆள் பற்றாக்குறை இருப்பதாலும் சிலை கடத்தல் வழக்குகள் விசாரணைக்கு ஒத்துழைப்பு மட்டுமே அளிக்க முடியும் என சிபிஐ தெரிவித்துள்ளது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அரசு தலைமை வழக்கறிஞர், சிபிஐ அனுப்பிய கடிதம் குறித்து தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை இது குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.