ஸ்டெர்லைட் விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் கடந்த ஆண்டு மே மாதம் 22-ந்தேதி வன்முறையாக வெடித்தது. போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. தமிழக அரசின்  நடவடிக்கைக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது, இந்த வழக்கின் விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்தியது. மேலும்,  தூத்துக்குடி  மக்களிடமும் கருத்துக்களை பெற்றது. இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்கலாம் என தருண்அகர்வால் குழு  பரிந்துரைத்து. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 15-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி வழங்கி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.