காவல்துறையின் அறிக்கை ஸ்டெர்லைட்டுக்கு சாதமாகவே உள்ளது – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்

275

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என பேசினால் அது எப்படி குற்றமாகும் என்று கேள்வி எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், காவல்துறையின் அறிக்கை ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதமாகவே உள்ளது என்று தெரிவித்தனர். தூத்துக்குடியை சேர்ந்த மோகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்கள் மீதும், துப்பாக்கிச்சூடு தொடர்பாக அரசுக்கு எதிராக சிபிஐ மற்றும் அருணா ஜெகதீசன் ஆணையத்திடம் சாட்சி கூறுபவர்கள் மீதும் பொய் வழக்கு பதிவு செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி எஸ்.பி முரளிரம்பா இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.  அதன்படி எஸ்.பி முரளிரம்பா நேரில் ஆஜராகி அறிக்கை அளித்தார்.

அந்த அறிக்கையை பார்த்து கோபமடைந்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று பேசினால் அது குற்றமா என்று கேள்வி எழுப்பினார்.

அப்படியெனில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்றும் காவல்துறையின் அறிக்கையை பார்க்கும் போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்படுவது போல் தெரிவதாக நீதிபதிகள் சந்தேகம் எழுப்பினர்.

ஒருபுறம் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்று கூறும் அரசு, மற்றோரு புறம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை எடுப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக மைக்கில் ஜீனியஸ், சந்தோஷ்ராஜ் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் நகல்களை தாக்கல் செய்ய தூத்துக்குடி எஸ்.பி-க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of