2 மாதங்களாக குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மறியல்

214

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மரியநாதபுரம் பகுதியில், பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக புதிதாக குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது. ஆனால் புதிய குழாய்கள் மூலம் இதுவரை தண்ணீர் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததால், ஒரு குடம் தண்ணீரை 13 ரூபாய்க்கு வாங்குவதாக வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் குடிநீர் விநியோகம் செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, திண்டுக்கல் – நத்தம் சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.