இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை – போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் குண்டு வீச்சு

478

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூகத்தினர் கடந்த 8-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.

மாநிலம் முழுவதும் ரயில் மறியல், சாலை மறியல், தர்ணா மற்றும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், தோல்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.

பதற்றத்தை குறைக்கும் விதமாக மலர்னா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஏராளமான போலீசார், ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.