+2 மாதிரி வினாத்தாள் மாற்றத்தை கண்டித்து மாணவிகள் போராட்டம்

1747

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுத்தேர்வை முன்னிட்டு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

மேலும் கடந்த காலாண்டு, அரையாண்டுத் தேர்வின் போது கொடுக்கப்பட்ட மாதிரி வினாத்தாளை வைத்து தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுக்கு மாதிரி வினாத்தாளை புதியாக மாற்றியதாக தெரிகிறது.

இதுகுறித்து, +2 மாணவிகள் கூறுகையில்,

“மாதிரி வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒராண்டாக பழைய மாதிரி வினாத்தாளை வைத்தே தேர்வுக்கு தயாராகி வந்தோம்.

இந்நிலையில், தேர்வுக்கு மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில் திடீரென்று பள்ளிக் கல்வித் துறை மாதிரி வினாத்தாளை புதியதாக மாற்றினால் தேர்வை எதிர்கொள்ள கடினமாக இருக்கும். இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கூறினர்.

இதனை வலியுறுத்தி புதுக்கோட்டையில் ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாற்றப்பட்ட மாதிரி வினாத்தாள் பழையபடியே கொடுக்க வேண்டும் அப்போதுதான் தேர்வை எதிர்கொள்வது தங்களுக்கு எளிதாக இருக்கும் என மாணவிகள் தெரிவித்தனர்.

இதை வைத்துதான் பல மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்தோம் என குறிப்பிட்ட அவர்கள், திடீரென்று அரசு எடுக்கும் இந்த முடிவினால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்றும் கூறினர். தங்களின் கோரிக்கையை ஏற்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் தங்களுடன் வந்து பேசி தங்களது கோரிக்கையை ஏற்று தமிழக அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.