மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து மாணவர்கள் போராட்டம்

363

நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து, தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தமிழில் தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், வருகை பதிவேடு 70 சதவீதத்திற்கு கீழ் குறைந்தால், அபராதம் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.

இதனை கண்டித்து, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர்கள் அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்றதாக கூறி மாணவ- மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

காவல்துறையின் இந்த அடக்குமுறையை கண்டித்து, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of