செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து

381

சூடான் நாட்டின், அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சூடான் நாட்டின் கிழக்கு பகுதி வழியாக அரசு அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அல் கடாரிப் மாநிலத்தில் உள்ள வயல்வெளியின் மீது பறந்தபோது அங்கிருந்த ஒரு செல்போன் கோபுரம் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தது.

எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் நடந்த இந்த விபத்தில், அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் இங்குள்ள நைல் நதிக்கு அருகாமையில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் இரு விமானிகள் உயிரிழந்தனர்.

தொடர்ந்து, அக்டோபர் மாதம் தலைநகர் கார்ட்டோமில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையில் இரு ராணுவ விமானங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.