“என் மாமாவை பிணக்குவியலில் தேடினார்கள்” – சுனாமி தினத்தன்று சந்தித்த வலிகளை பகிரும் இளைஞர்..!

1221

டிசம்பர் 26. இந்த தேதியை கேட்டாலே அந்த தருணத்தில் கடலின் கோரத்தாண்டவத்தை பார்த்த எவருக்கும் கதறல் சப்தமும், பிணக்குவியலும் தான் நினைவுக்கு வரும்.. ஆம்.. அப்படியொரு இயற்கை சீற்றத்தை தமிழகம் மட்டுமல்ல.. உலகமே இன்றைய காலக்கட்டத்தில் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு தமிழகம் வரை தாக்கியது. தமிழகத்தில் பல்வேறு பகுதியில் சுனாமி பேரலையின் தாக்கத்தால் பல்லாயிரக்கணக்கான பேர் கடலில் செத்துக்கிடக்கும் மீன்களை போல மிதந்துகொண்டிருந்தார்கள்.

இந்த பேரலையிலிருந்து உயிர்பிழைத்து தப்பிய பலருக்கும் இந்த அனுபவம் ஆறாத வடுவாகவே இன்றளவும் பார்க்கின்றனர் என்றால் மிகையல்ல.. அதோடு பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தங்களின் பெற்றோர்களையும், பெற்றோர்கள் பல நூறு குழந்தைகளையும் கண்ணெதிரே கடலில் மிதப்பதை கண்டு கதறிய தருணங்கள் இதயத்தில் ஆறாத வலியைதான் தரும்.

அப்படியொரு வலியை 10 வயது இளைஞர் (இப்போது அவருக்கு 25 வயது) டிசம்பர் 26 ஆம் தேதி 2004-ல் சந்தித்த சத்தியம் டிவி  இணையதள துணை ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டதை தற்பொழுது காணலாம்..

“எனது பெயர் கிளுர் முஹம்மது. தஞ்சாவூர் மாவட்டம் மந்திரிப்பட்டினம் என்னும் கிராமத்தை சேர்ந்தவன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன். சுனாமி பேரலை தாக்கியபொழுது எனக்கு 10 வயது. 5 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

அரையாண்டு தேர்வு விடுமுறைக்காக காரைக்கால் மாவட்டம் அப்பா கடை வைத்திருக்கும் ஊரான திருமலைராயன்பட்டினத்திற்கு சென்றிருந்தேன். அன்று தான் நான் முதன்முதலில் அங்கு செல்கிறேன். பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் சிறுவயதில் இருக்கும் ஆசைகளோடு சென்றேன்.. டிசம்பர் 26 2004 நான் அங்கு சென்று 3-வது நாள் என்று நினைக்கிறேன்.

அப்போது விடியற்காலை 6 மணி இருக்கும். நான் வீட்டில் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தேன். அப்போது வாகனங்களின் ஹார்ன் சப்தம் என் காதுகளை கிழிக்கும் அளவிற்கு இருந்தது.எப்போதும் அதுமாதிரியான வாகன நெரிசல் இருக்காது என்பதை உணர்ந்த நான் கண்விழித்து வெளியே சென்று பார்த்தேன்.

வரிசையாக பேருந்துகள் வாகனங்கள் என கிழக்கு(கடலுக்கு) திசைக்கு எதிர் திசையில் வேகமாக சென்று கொண்டிருந்தன. எனக்கு ஒன்றும் புரியாமல் நீண்ட நேரம் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன்..

சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் மாரில் அடித்துக்கொண்டபடி கதறியழுது ஓடிவந்துகொண்டிருந்தனர். அந்த மக்கள் வேறு யாருமில்லை. அதே ஊரைச்சேர்ந்த பட்டினச்சேரி என்னும் மீனவ கிராம மக்கள் தான் அது. அதனை கண்ட நான் பதறியபடி, அண்ணனையும், அப்பாவையும் எழுப்பினேன்..

வெளியே பார்த்த நிகழ்வை அறியாத குழந்தையாக இருந்த நான் பதற்றத்தோடு ஒப்பிக்கிறேன்.. உடனே வெளியே சென்று பார்த்த அண்ணனும்,அப்பாவும் சட்டென வெளியே பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினர்.

சிறிது நேரத்தில் திரும்பிய அவர்கள், கடல் கொந்தளிச்சு ஊருக்குள் கடல் தண்ணீர் புகுந்துருச்சாம்.. நெறையா பேர கடல் அடிச்சுட்டு போயிடுச்சாம் என அப்பாவும்,அண்ணனும் பேசிக்கொண்டனர்.

பெரும் ஆசைகளோடு வந்த எனக்கு அந்த தருணம் பெரும் காயத்தை ஏற்படுத்தியது. காரைக்கால் பீச்சுக்கு போகலாம், தரங்கம்பாடி கோட்டைக்கு போகலாம், நாகப்பட்டினம் பீச்சுக்கு போகலாம் என கனவில் மிதந்துகொண்டிருந்த எனக்கு அது வெறும் கனவாய் மட்டுமே கடந்து போனது.

சிறிது நேரத்தில் கடலில் பிணங்கள் மிதப்பதாக தகவல்களும் அவ்வப்போது வந்தவண்ணம் இருந்தது. வெளியே சென்று வேடிக்கை பார்க்கக்கூட அப்பா அப்போது என்னை அனுமதிக்கவில்லை.

வீட்டில் சோகம் நிறைந்த முகத்தோடு ஓரமாக அமர்ந்தபடி ஒடுங்கி கிடந்தேன்.. என் அண்ணனுக்கு அப்போது 13 வயது.அவன் என்னுடன் எனக்கும் என் தம்பிக்கும் தைரியம் சொன்னான்.

ஆனால் எனக்கு சிந்தனைகள் அனைத்தும் அந்த பேரலையில் தாக்கப்பட்ட மக்களை நோக்கியே இருந்தது. அந்த தருணத்தில் என் வலியை வெறும் வார்த்தைகளால் எளிதில் சொல்லிவிடமுடியாது. என் வாழ்க்கையில் அந்த அறியா வயதில் ஒரு மிகப்பெரிய ரணத்தை ஏற்படுத்திய தருணம் அது.

அதோடு நின்றுவிடவில்லை எனது பயம்.. எனது நெருங்கிய உறவுக்கார மாமா ஒருவர்ட் தரங்கம்பாடியில் அப்போது அல்வா விற்கும் தொழில் செய்துகொண்டிருந்தார். கடலுக்கு அருகில் தான் அவர் தங்கியிருந்த வீடு. அவரை காணவில்லை எனவும் ஒரு தகவல் வந்து எனது தலையில் இடியை போட்டது.

ஒருகணம் அழ ஆரம்பித்துவிட்டேன்.. அன்று முழுவதும் தேடுதல் வேட்டை. 2-வது நாளும் தேடுதல் வேட்டை ஒரு கட்டத்தில் அவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருக்கக்கூடும் என நாகை,தரங்கம்பாடி, காரைக்கால் கடற்கரையில் குவிந்துகிடந்த பிணக்குவியலிலும் தேடிப்பார்த்தனர்.

என் மாமாவிற்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என இறைவனிடம் வேண்டி அழுதுகொண்டிருந்தேன்.

அந்த சிறுபிள்ளையின் பிரார்த்தனை இறைவன் காதில் விழுந்துவிட்டதோ என்னவோ, என் மாமா தப்பித்து சென்று 3 நாட்களுக்கு பிறகு வீடு திரும்பினார். அந்த செய்தியை எனது அப்பா வந்து சொன்னதும், அளப்பறிய சந்தோஷத்தில் திழைத்தேன்.

இருந்தபொழுதும் என்னை போன்று அனைவருக்கும் அவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறவில்லையே என்ற வருத்தம் என்னை அதிகமாகவே பாதித்தது.

எனது அந்த குழந்தைப்பருவ வயதில் மட்டுமல்ல.. எனது 25 வருட அனுபவத்தில் அப்படியொரு நிகழ்வை எளிதாக கடந்துசெல்ல முடியவில்லை..”  என்றார் அந்த இளைஞர் கனத்த மனதோடு…

 

 

 

 

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of