பஸ் கண்டக்டர் சூப்பர் ஸ்டாரான கதை..! – Super Star RajiniKanth Story

3205

டிசம்பர் 12 ஆம் தேதி 1950 ஆம் ஆண்டு பிறந்தவர் ரஜினிகாந்த்(எ) சிவாஜீராவ் காயகவாட். ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.

தமிழ் சினிமாவில் தனக்கென முத்திரை பதித்த இவர் ஆரம்ப காலக்கட்டத்தில்பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

1973 ஆம் ஆண்டில் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நடிப்பிற்கான பட்டயம் பெற்றார். இவரின் முதல் திரைப்படம் அபூர்வ ராகங்கள். இதனை கைலாசம் பாலசந்தர் இயக்கினார். இந்தப் படம் உட்பட இவரின் துவக்ககாலத்தில் எதிராளிக் கதாப்பத்திரங்களில் நடித்தார். இவருடைய ரசிகர்கள் இவரை தலைவர் என்றும் “சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கின்றனர்.

 

2007 ஆம் ஆண்டில் ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காக 26 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றார். இதன்மூலம் ஆசியாவிலேயே நடிகர் ஜாக்கி சான்-னுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆனார்.

ரஜினிகாந்த் ஆறு முறை தமிழக அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் நான்கு முறை சிறந்த நடிகருக்கான விருதும், இரண்டுமுறை சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதினையும் பெற்றுள்ளார்.சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார்.

நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணிபுரிந்துள்ளார். நடிகராக மட்டுமின்றி ஆன்மீகவாதியாகவும், திராவிட அரசியல்களில் ஆளுமையாகவும் இருந்துவருகிறார்.

2004 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் விருதும், 2016 ஆம் ஆண்டு கலைகளில் இவரின் பங்களிப்பை பாராட்டும் விதத்தில் இவருக்கு நாட்டின் உயரிய குடிமை விருதுகளில் இரண்டாவதான பத்ம விபூசண் விருதும் வழங்கி கௌரவப்படுத்தியது.இந்தியத் திரைப்படத்துறையின் ஆளுமைக்கான விருது 45 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது.

ரஜினிகாந்த் டிசம்பர் 12, 1950 ஆம் ஆண்டு பெங்களூர், மைசூரில் (தற்போது கர்நாடகா) பிறந்தார். ராமோசி ராவ் காயக்வாடுக்கும் (கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்), ரமாபாய்க்கும் (கோவை எல்லையில் பிறந்தவர்) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் மராத்தியர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரின் தந்தை காவலராகப் பணிபுரிந்தவர்.தாய் குடும்பத் தலைவியாக இருந்தார்.

இவரின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட் ஆகும். மராட்டியப் பேரரசர் சிவாஜி பேரரசரின் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. வீட்டில் மராத்திய மொழியும் வெளியில் கன்னடமும் பேசி வளர்ந்தார். ரஜினிகாந்தின் முன்னோர்கள் மகாராட்டிரம் மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள மாவதி கடெபதாரிலும் தமிழ்நாடு, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குப்பத்திலும் வாழ்ந்தனர். இவருக்கு சத்ய நாராயண ராவ், நாகேஷ்வர ராவ் எனும் இரு மூத்த சகோதரர்களும், அசுவத் பாலுபாய் எனும் மூத்த சகோதரியும் உள்ளனர்.

தாயை இழந்த சிவாஜி(ரஜினி):

1956 ஆம் ஆண்டில் தனது தந்தையின் பணிநிறைவிற்குப் பின் இவரது குடும்பம் பெங்களூர் சென்று அனுமானந்தா நகரில் வீடு கட்டி குடியேறினர். ஒண்பது வயதாக இருக்கும் போது தனது தாயை இழந்தார்.

 பெங்களூரில் உள்ள ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்ட ரஜினிகாந்தின் மனதில் நடிக்கும் ஆவல் வளர்ந்தது.

10 பைசா சம்பளம் :

ஆரம்பகாலத்தில் சிவாஜி அலுவலக உதவியாளராகவும், தச்சராகவும் வேலை பார்த்தார். ஓர் இடத்தில் மூட்டை தூக்கும் வேலை பார்த்தார். இதற்கு சம்பளமாக ஒரு மூட்டைக்கு 10 பைசா கொடுக்கப்பட்டது. பின்னர் பெங்களூர் போக்குவரத்து சேவைத் தேர்வு எழுதி நடத்துனருக்கான உரிமம் பெற்றார். 19 மார்ச் 1970 அன்று ஓட்டுநர் ராஜ பகதூருடன் பணியில் சேர்ந்தார்.

 இவர்களது பணி நேரம் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆகும். பணி முடிந்த பிறகு மாலையில் அனுமந்த் நகரில் ராஜ பகதூர் வீட்டிற்கு சிவாஜி செல்வார். பெங்களூர் போக்குவரத்து சேவையால் நடத்தப்படும் நாடகங்களுக்கு இருவரும் ஒத்திகை பார்ப்பர். ஒத்திகை சாம்ராஜ்பேட்டை காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள மண்டபத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 வரை நடக்கும். எப்போதும் திரைப்படங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர்.

 ஒவ்வொரு வாரமும் வெளியாகும் ஒவ்வொரு படத்தையும் பார்ப்பர். சிவாஜிக்கு சிவாஜி கணேசன், ராஜ்குமார் மற்றும் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பிடிக்கும். அப்படக் காட்சிகளில் அவர்களைப் போல் சிவாஜி நடித்துக் காண்பிப்பார்.

அப்போது 25-க்கும் மேற்பட்ட நாடகங்களில் சிவாஜி நடித்து இருந்தார். அப்போது இவருடன் இருந்த நண்பர்கள், நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் இவர் ஏன் திரைப்படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறினர். சிவாஜிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் யாரிடமும் உதவி கேட்பதையும் விரும்பியதில்லை.

 அவர் உருவத்தில் அழகானவரும் கிடையாது. அவருக்குப் பின்புலமும் எதுவும் கிடையாது. நான் நடத்துனர் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்று கேட்டால் யாராவது வாய்ப்புக் கொடுப்பார்களா என்ற எண்ணம் மனதில் ஓடியது. பகதூரும் சிவாஜியின் மற்ற நண்பர்களும் அந்நேரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேருமாறு அவரை அறிவுறுத்தினர்.

ஒருவேளை திரைப்படத்துறையில் சேர முடியாவிட்டால் தனக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசாங்க நடத்துனர் பணியை விடுவதற்கு சிவாஜிக்கு விருப்பம் இல்லை. எனவே பணியிலிருந்து சாதாரண விடுப்பும் பின்னர் அங்கீகரிக்கப்படாத விடுப்பும் எடுத்தார். கே. பாலசந்தர் தன்னுடைய மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஏ.வி.எம். ராஜனின் கதாபாத்திரப் பெயரான ரஜினிகாந்தை இவருக்குச் சூட்டினார். இப்பெயருக்கு ‘இரவின் நிறம்’ என்று பொருள்.

 

நடிகராகும் ஆவலுடன் சென்னை வந்த ரஜினிகாந்த், தன் நண்பர் ராஜ் பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். 1975 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். ஒரு பெண்ணாசை பிடித்தவராக அவர் நடித்த “மூன்று முடிச்சு” (1976) அவரை ஒரு சிறந்த நடிகராக அடையாளம் காட்டியது. அதன் பிறகு 16 வயதினிலே, காயத்ரி போன்ற படங்களில் வில்லனாக நடித்தார்.

பின்னர் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற திரைப்படங்களில் நல்லவனாக நடிக்கத் தொடங்கினார். பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை போன்ற திரைப்படங்கள் அவரை ஒரு அதிரடி நாயகனாக ஆக்கியது.

தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் தான் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்தார். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் மிகவும் வித்தியாசமானது அவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா. இப்படம் இந்து சமயப் புனிதரான ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்ற மகானின் வாழ்க்கை பற்றியது.

1980களில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த வேலைக்காரன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்றவை பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தன. 1990களில் இவர் நாயகனாக நடித்த அண்ணாமலை, பாட்சா, படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

2002 ஆம் ஆண்டு வெளிவந்த பாபா (திரைப்படம்) சில இடங்களில் வெற்றி பெறவில்லை. எனினும், அவர் நடித்து 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகிக்கும் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த சிவாஜிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2010 ஆம் ஆண்டு வெளியாகிய எந்திரன் படம் பெரு வெற்றியைப் பெற்றது.

 

ரஜினிகாந்தின் படங்கள் அதிரடியும், நகைச்சுவையும் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படங்களாக உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்துப் பார்ப்பதாக இருக்கும். தமிழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் 160 திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

 பஸ் நடத்துனராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று உலகமே திரும்பி பார்க்கும் வகையில் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தின் சினிமா சகாப்தம் தொடங்கிய தினம் இன்று…! ஆம்…

ரஜினிகாந்த் நடித்த முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியான தினம் இன்று…!

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of