உச்சநீதிமன்ற தீர்ப்பு: “இதையும் செஞ்சிருங்க PM சார்..” – அதிரடி கோரிக்கை வைத்த குமாரசாமி..!

671

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி ஒரு அதிரடி கோரிக்கையை முன்வைத்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் என மொத்தம் 17 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதனால், கடந்த ஜூலை மாதத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சி, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.

இந்த நிலையில், அப்போதைய, சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ், 17 எம்எல்ஏக்களை, தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார், இதை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில் 17 பேரையும் தகுதி நீக்கம் செய்தது, செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

 

அதேநேரம், இந்த சட்டமன்ற பதவிக்காலம் முடிவடையும் வரை அவர்கள் தேர்தல்களில் போட்டியிட தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் விரும்பியபடியே இடைத்தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதனால் குமாரசாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீருக்கு, அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்கீழ், வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு சாதனை படைத்து விட்டது. அதே பாணியில் கட்சி தாவல் தடைச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து சாதித்து விட்டால் நல்லது என்று தோன்றுகிறது.

அந்த சட்டத்தை வைத்து எந்த பலனும் கிடைக்கப் போவது கிடையாது. கடந்த, மூன்று மாதங்களாக, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், மனதளவில் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டார்கள். இவ்வாறு அவர்கள் கஷ்டப்பட்டதை, பெரிய மனது செய்து மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவரும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற எம்எல்ஏக்கள் மனக்கஷ்டம் அடைய கூடாது என்றால், கட்சி தாவல் தடைச் சட்டத்தை மத்திய அரசு நீக்கிவிடலாம். இவ்வாறு குமாரசாமி, தெரிவித்தார். 17 எம்எல்ஏக்களும், மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்ப்பால் குமாரசாமி அதிருப்தி அடைந்திருப்பது அவரது பேட்டியிலிருந்து தெரிகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of