சுருளி அருவியில் நீர்வரத்து: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

331

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஒரு மாதத்துக்குப் பிறகு புதன்கிழமை நீர்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோடை காலம் காரணமாக கடந்த 30 நாள்களாக இந்த அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து வனச்சரணாலயத்தினர் மாற்று ஏற்பாடாக அடிவாரப் பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் “ஷவர்’ குழாய் அமைத்தனர்.

இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் நீராடிச் சென்றனர். கடந்த 5 நாள்களாக வெப்பச்சலனம், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வந்தாலும், சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரிசிப்பாறை, ஈத்தக்காடு போன்ற நீர் ஊற்று மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் புதன்கிழமை சுருளி அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதித்தனர். 30 நாள்களுக்குப் பிறகு அருவியில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of