தங்கக்கடத்தல் வழக்கு – ஸ்வப்னா சுரேஷ் முன்ஜாமீன் கோரி மனு

588

கேரளமாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில், உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கக்கட்டிகள் கடத்தலில் அமீரகத்தின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த  ஸ்வப்னா சுரேசுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஸ்வப்னா சுரேசுக்கும் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் தங்கக்கடத்தலில் தொடர்பு இருப்பது அம்பலமானதால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து சிவசங்கர் முதல்வரின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனிடையே, கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனும் ஸ்வப்னாவும் ஒருநிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோவும் புதியசர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநில தகவல்தொழில்நுட்பத்துறையிலும் உயரதிகாரியாகவும் அவர் பணிபுரிந்திருக்கிறார்.  மேலும் ஸ்வப்னா சுரேசும், சந்தீப் நாயர் என்பவரும் இணைந்து கார் ஒர்க் ஷாப்பை  நடத்திவந்ததும் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் சார்பாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தங்கக்கடத்தலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும் ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்திற்கு பார்சல் வந்தது தெரியாது என்றும் அவர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளமாநில காவல்துறையினர் ஸ்வப்னாவையும் சந்தீப்நாயரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தற்போது, தமிழகத்தில்தான் ஸ்வப்னா தலைமறைவாக இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement