மத்திய பாஜக அரசின் சோதனை மிகுந்த காலத்தில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளேன் – டி.ராஜா

307

மத்திய பாஜக அரசின் சோதனை மிகுந்த காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளேன் என்று டி.ராஜா தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருந்து வந்த சுதாகர் ரெட்டி, தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தேசிய பொதுச்செயலாளராக அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜா, நரேந்திர மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் நாடு இக்கட்டான காலகட்டத்தை கடந்து செல்கிறது என்று குற்றம் சாட்டினார். மக்களவை தேர்தலில் இடதுசாரிகள் தொகுதிகளை இழந்திருக்கலாம். ஆனால் இதனை வைத்து இடதுசாரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டனர் என்றோ அல்லது சித்தாந்தம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றை இழந்துவிட்டனர் என்றோ கருதக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்றும் சோதனை மிகுந்த காலத்தில் பொதுச்செயலாளராக பதவியேற்றுள்ளதாகவும், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-சும் சேர்ந்து இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்வதாகவும் டி.ராஜா குற்றம் சாட்டினார். அனைத்து இடதுசாரி கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of